தமிழ்நாடு

உதவிப் பேராசிரியர் பணிக்கு நெட் தகுதி கட்டாயம்: யுஜிசி

DIN

பல்கலைக்கழக, கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி தொடர்பாக புதிய வரைவு வழிகாட்டுதலை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதில், உதவிப் பேராசிரியர் பணிக்கு முதுநிலை பட்டப் படிப்புடன் நெட் (தேசிய அளவிலான தகுதித் தேர்வு) அல்லது செட் (மாநில அளவிலான தகுதித் தேர்வு) தேர்வுகளில் ஏதாவது ஒன்றில் தகுதி பெற்றிருப்பது கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரைவு வழிகாட்டுதல் நடைமுறைக்கு வந்த பின்னர், அடுத்த ஆறு மாத காலங்களுக்குள் மாநில அரசுகளும், பல்கலைக்கழகங்களும் புதிய வழிகாட்டுதலின் அடிப்படையில் சட்டத்தில் மாற்றங்களைச் செய்ய வேண்டும் எனவும் யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
உயர் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில், நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்களுக்கான வழிகாட்டுதலை யுஜிசி உருவாக்கி, வெளியிட்டு வருகிறது. இந்த வழிகாட்டுதல்களில் அவ்வப்போது மாற்றங்களையும் யுஜிசி செய்து வருகிறது.
இப்போது, பல்கலைக்கழக, கல்லூரி உதவிப் பேராசிரியர் கல்வித் தகுதிக்கான புதிய வரைவு வழிகாட்டுதல் 2018-ஐ யுஜிசி வெளியிட்டுள்ளது. இதில் உதவிப் பேராசிரியர் பணிக்கு நெட் அல்லது செட் தகுதி கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அதே நேரம், யுஜிசி வழிகாட்டுதல் 2009 மற்றும் வழிகாட்டுதல் 2016 ஆகிவற்றின் அடிப்படையில் பிஎச்.டி. முடித்தவர்களுக்கு நெட் அல்லது செட் தேர்வு தகுதியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும், இணைப் பேராசிரியராக பதவி உயர்வு பெற குறைந்தபட்சம் 8 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் எனவும், ஏழு ஆராய்ச்சித் தாள்களை வெளியிட்டிருக்க வேண்டும்.
பேராசிரியர் பதவி உயர்வு பெற, 10 ஆண்டுகள் பணி அனுபவமும், குறைந்தபட்சம் 10 ஆராய்ச்சி பேப்பர்களை வெளியிட்டிருக்க வேண்டும். கல்லூரி முதல்வர் பணியில் நியமிக்கப்படுபவர் பிஎச்.டி. முடித்திருப்பதோடு, 15 ஆண்டுகள் ஆசிரியர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அதோடு ஆராய்ச்சி மதிப்பெண் 120 பெற்றிருக்க வேண்டும் எனவும் வரைவு வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரைவு வழிகாட்டுதல் மீது பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை யுஜிசி வரவேற்றுள்ளது. 
இந்த கருத்துகளை ugcregulations2017@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வரும் 28-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என யுஜிசி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT