ஜெயலலிதா வழியில் ஆட்சி, கட்சியைக் காப்போம்: ஓ.பன்னீர்செல்வம்
தமிழகத்தில் ஜெயலலிதா வழியில் அதிமுக ஆட்சி, கட்சியைக் காப்போம் என்று சட்டப் பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதிபடத் தெரிவித்தார்.
தமிழகத்தில் ஜெயலலிதா வழியில் அதிமுக ஆட்சி, கட்சியைக் காப்போம் என்று சட்டப் பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதிபடத் தெரிவித்தார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முழுஉருவப் படத் திறப்பு விழா, சட்டப் பேரவை மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்துப் பேசியது:
முதல்வராக இருந்த ஜெயலலிதா இந்த மண்ணை விட்டு மறைந்தாலும், நிலைத்த புகழோடு, நீக்கமற நம்முள் நிறைந்திருக்கிறார். இவ்வளவு விரைவாக அவர் நம்மை விட்டுப் பிரிந்து செல்வார், தீராத வேதனையை நமக்கெல்லாம் தருவார் எனக் கனவில் கூட நினைத்துப் பார்த்தது இல்லை. உடல் நலிவுறக் காரணமான நோயையும் வெற்றி கொள்வார் என நம்பினோம். எங்களது நம்பிக்கையும், கோரிக்கையும் ஈடேறவில்லை.
ஆட்சி, கட்சியைக் கட்டிக் காப்பது கடமை: முதல்வராக இருந்த ஜெயலலிதா இறந்து விட்டார் என்ற செய்தி கேட்டதும் கடல் நடுவே துடுப்பின்றித் தத்தளிக்கும் படகு போன்று அலை மோதினோம்.
மறைந்த ஜெயலலிதா வளர்த்தெடுத்த கட்சியையும், உருப்பெறச் செய்த ஆட்சியையும் கட்டிக் காப்பது ஒன்றுதான் அவருக்குச் செலுத்தும் நன்றிக் கடன் என உணர்ந்து எங்களை தேற்றிக் கொண்டோம். கட்சியினர் அனைவரும் ஒன்றுபட்டு நின்று, ஆட்சியையும், கட்சியையும் மாற்றார் கபளீகரம் செய்து விடாமல் தடுத்து நிறுத்தினோம். அந்த விரக்தியில் ஆட்சி நீடிக்காது, தொடராது என மற்றவர்கள் சொன்ன ஆருடத்தைத் தவிடுபொடியாக்கி, அவர்களது கனவுக் கோட்டைகளைத் தகர்த்தெறிந்தோம். புனித ஜார்ஜ் கோட்டையிலும், பெருமைக்குரிய சட்டப் பேரவையிலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வழியிலான ஆட்சியே தொடரும் என்ற புதிய வரலாற்றை உருவாக்கி இருக்கிறோம்.
ஜெயலலிதா இல்லாத இந்த சட்டப் பேரவையில், எதிர்க்கட்சிகள் தொடுக்கும் கேள்விக் கணைகளால் அவரது கட்சியினர் வீழ்ந்து போவார்கள், என்றெல்லாம் வெற்று ஆரவாரம் செய்து கொண்டிருந்தவர்களின் ஆணவப் போக்கை அடக்கி, இந்த சட்டப் பேரவையை மிக ஆற்றலோடு நடத்த முடியும் என்பதை நாம் நிரூபித்துக் காட்டியிருக்கிறோம்.
கட்சியின் பெருமையை நிலை பெறச் செய்வோம்: இந்த ஆண்டு மட்டுமல்ல, அடுத்த ஆண்டும், அதற்கடுத்து வரும் ஆண்டுகளிலும், ஜெயலலிதா வழியிலான ஆட்சியே தடையின்றித் தொடரும். அவரது தொண்டர்களால் நடத்தப்படும் அரசுதான், அடுத்தடுத்த நிதிநிலை அறிக்கைகளைத் தாக்கல் செய்யும். அதற்கான பயிற்சியை மறைந்த ஜெயலலிதா எங்களுக்கு வழங்கியிருக்கிறார்.
நெற்றி வியர்வையை நிலத்தில் சிந்தி, தனது உடல் நலிவையும் பொருட்படுத்தாமல் தமிழகம் முழுவதும் சுற்றிச் சுழன்று மக்களின் ஆதரவைப் பெற்று இந்த ஆட்சியை ஜெயலலிதா உருவாக்கித் தந்துள்ளார்.
மேலும், கட்சியையும் கட்டிக் காத்து இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய இயக்கமாக வளர்த்துள்ளார். எனவே, இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் கட்சியின் பெருமையை தமிழகத்தில் நிலை பெறச் செய்வோம் என்றார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
ஒன்றரை கோடி தொண்டர்களும் செல்லப் பிள்ளைகள்
சட்டப் பேரவை மண்டபத்தில் திங்கள்கிழமை ஓ.பன்னீர்செல்வம் பேசியது:
சட்டப் பேரவையில் ஒருமுறை எதிர்த்தரப்பில் இருந்து என்னை நோக்கி ஒருகுரல் வந்தது. "முதல்வரின் (ஜெயலலிதாவின்) செல்லப் பிள்ளையாக இருக்கும் பன்னீர்செல்வம்...' என்று அந்த வார்த்தைகளுக்கு ஒரு அழுத்தம் கொடுத்து அடிக்கோடிட்டு அந்தக் குரல் பேசத் தொடங்கியது. அப்போது நான் அவருக்கு பதில் கூறினேன். "பன்னீர்செல்வத்துக்கு மட்டுமல்ல, எங்கள் கட்சியில் இருக்கும் ஒன்றரை கோடி தொண்டர்களும் ஜெயலலிதாவின் செல்லப் பிள்ளைகள்தான்' என்றேன். எனது இந்தப் பதிலுக்கு முதல்வராக இருந்த ஜெயலலிதா பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தார்.