முகப்பு
தமிழ்நாடு

ஜனநாயகமும், மதச்சார்பின்மையும் தொன்று தொட்டு இருந்து வருபவை: இல.கணேசன்

நம் நாட்டில் ஜனநாயகமும், மதசார்பற்ற தன்மையும் இன்று, நேற்றல்ல; தொன்றுதொட்டு இருந்து வருகின்றன என்றார் பா.ஜ.க. மாநிலங்களவை உறுப்பினர் இல. கணேசன்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:14 PM
திருச்சி தேசியக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசுகிறார் பாஜக மாநிலங்களவை உறுப்பினர் இல. கணேசன்.
பகிர்:

நம் நாட்டில் ஜனநாயகமும், மதசார்பற்ற தன்மையும் இன்று, நேற்றல்ல; தொன்றுதொட்டு இருந்து வருகின்றன என்றார் பா.ஜ.க. மாநிலங்களவை உறுப்பினர் இல. கணேசன்.
திருச்சி தேசியக் கல்லூரியில், தமிழ்த் துறை சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற தமிழ்ப் பேரவை விழா நிகழ்ச்சியில் அவர் "இது நமக்கு புதிதல்ல' என்ற தலைப்பில் பேசியது :
இந்தியா சுதந்திரம் பெற்றதற்கு பின்னர்தான் இந்திய தேசம் உருவாக்கப்பட்டது என்றதொரு தவறான தகவல்களை சிலர் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர். வரலாறுகளை பொய்யாக்க முடியாது. சுதந்திரத்துக்கு முன்பே பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஜனநாயகம், மதசார்பற்ற தன்மை ஆகியவை இந்தியாவில் தொன்று தொட்டு நடைமுறையில் இருந்து வருகிறது என்பதற்கு வரலாறு, இதிகாசங்கள் மூலம் எத்தனையோ சான்றுகளை கூற முடியும்.
மன்னராட்சி காலத்தில் பின்பற்றப்பட்ட ஆட்சி முறைகள், மக்களாட்சி, நிர்வாகம் ஆகியவை உலகுக்கே வழிகாட்டக்கூடியவை. ராமாயண காலத்திலேயே மன்னர் மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குவதை அறிய முடிகிறது. 
அதுபோலத்தான் மதசார்பின்மையும். இந்தியாவை ஆண்ட மன்னர்கள் பலரும் மத, இன பேதமின்றி ஆட்சி செய்து வந்துள்ளனர். ஒரு மன்னர் காலத்து கோயிலை அடுத்து வந்த மற்ற இனத்தைச் சேர்ந்த மன்னர்கள் போற்றி வணங்கியதுடன் மேலும் செப்பனிட்டுள்ளனர். 
மதுரை மீனாட்சிஅம்மன் கோயில், தஞ்சை பெரிய கோயில் என பலவற்றை இதற்கு உதாரணமாக கூற முடியும். ஆனால் 1975 -ஆம் ஆண்டுக்குப் பின்னர், இந்திய அரசியல் அமைப்பில் மதசார்பின்மை என்ற வார்த்தையை பதிவு செய்ய வேண்டிய கட்டாயமாயிற்று.
எனவே, நமது முன்னோர்கள் நமக்கு வகுத்துச்சென்ற நிர்வாகம், அறிவியல், வானியல் சாஸ்திரம், ஜனநாயகம் உள்ளிட்ட பல்வேறு சிறப்புகள் மூலம் நாம் இந்தியர் என்பதில் பெருமை கொள்ள வேண்டும் என்றார் இல.கணேசன். 

"ஜெயலலிதா படம் தவறில்லை!'

முன்னதாக இல.கணேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை வைப்பதில் தவறில்லை. தமிழகத்தில் அவர் மறக்க முடியாத தலைவர்களில் ஒருவர்.
மத்திய அரசு இளைஞர்களுக்கு சுயதொழில் தொடங்க வங்கிக் கடனுதவி வழங்கி வருகிறது. யார் வேண்டுமானாலும் எந்த தொழிலும் தொடங்கலாம் என்ற வகையில்தான் பக்கோடா தொழில்கூட தொடங்க முடியும் எனக் கூறியதை, சிலர் விமர்சித்து வருகின்றனர். நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியினரின் கேள்விகளுக்கு பதில் அளித்த பிரதமர் மோடி, தவறாக ஏதும் பேசவில்லை. கேள்விகள் கடினமாக இருந்ததால் அதற்கு உரிய பதிலும் கடுமையாக இருந்தது. இதில் கண்டிக்கத்தக்க விஷயம் ஏதுமில்லை என்றார் அவர்.

முழு கட்டுரையைப் படிக்க →