தமிழ்நாடு

122 எம்.எல்.ஏ.,க்களுக்கு மட்டுமே கொறடா உத்தரவு: ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வாதம்- 22-க்கு விசாரணை ஒத்திவைப்பு

DIN

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாக, கூவத்தூரில் தங்கியிருந்த 122 எம்.எல்.ஏ.,க்களுக்கு மட்டுமே கொறடா உத்தரவு பொருந்தும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை வரும் 22-ஆம் தேதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
சட்டப் பேரவையில் கடந்த ஆண்டு பிப்.18 ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அப்போது அரசுக்கு எதிராக வாக்களித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களைத் தகுதிநீக்கம் செய்யக் கோரி திமுக கொறடா சக்கரபாணி மற்றும் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களான வெற்றிவேல் உள்ளிட்ட 4 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி மற்றும் நீதிபதி அப்துல்குத்தூஸ் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. திமுக சார்பில் மூத்த வழக்குரைஞர் கபில்சிபல், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர் பி.எஸ்.ராமன், முதல்வர் மற்றும் துணை முதல்வர் சார்பில் மூத்த வழக்குரைஞர் சி.எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அப்போது நடந்த வாதம்:
கபில் சிபல்: அரசியலமைப்புச் சட்டத்தின்படி சட்டப் பேரவைத் தலைவரிடம் கொடுக்கப்படும் புகார் மனுவை பேரவை விதிகளின்படி அதனைப் பரிசீலிக்கவோ அல்லது நிராகரிக்கவோ வேண்டும் என்பது அவரது கடமையாகும். 
ஆனால் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி பேரவைத் தலைவரிடம் கொடுக்கப்பட்ட மனுவை பேரவைத்தலைவர் பரிசீலிக்கவோ, நிராகரிக்கவோ இல்லை. அரசியல் சாசன பதவி வகிப்பவர்கள் கடமையைச் செய்யத் தவறும்போது அதில் நீதிமன்றம் தலையிடலாம் என்றார். 
பி.எஸ்.ராமன்: இந்த வழக்கு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில்மனுவில், 'கூவத்தூரில் தங்கியிருந்த 122 எம்.எல்.ஏக்களுக்கு மட்டுமே கடந்த ஆண்டு பிப்.18-ஆம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொறடா பிறப்பிக்கும் உத்தரவு என்பது அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் பொருந்தும். குறிப்பிட்ட சில எம்.எல்.ஏக்களுக்குப் பொருந்தாது எனக்கூற முடியாது. மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கள் அனைவருமே அரசுக்கு ஆதரவாகத்தான் வாக்களிக்க வேண்டும்' என்றார்.
சி.எஸ்.வைத்தியநாதன்: இந்த விவகாரத்தில் பேரவைத் தலைவர் எந்தவொரு முடிவும் எடுக்காத நிலையில் இதுகுறித்து நீதிமன்றம் ஆய்வு செய்யமுடியாது. ஆளுங்கட்சியைச் சேர்ந்த 122 எம்.எல்.ஏக்களுக்கு மட்டுமே கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என வாதிட்டார். இதனையடுத்து, வழக்கின் விசாரணையை வரும் 22-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT