தமிழ்நாடு

அப்துல் கலாம் வீட்டில் தொடங்கியதில் 'அரசியல்' இல்லை: ராமேசுவரத்தில் அரசியல் பயணத்தை தொடங்கிய கமல்ஹாசன் பேட்டி

DIN

குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் வீட்டிலிருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கியதில் 'அரசியல்' எதுவும் இல்லை என்று கமல்ஹாசன் கூறினார். 
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் உள்ள முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் வீட்டிலிருந்து புதன்கிழமை தனது அரசியல் பயணத்தை தொடங்கிய கமல்ஹாசன் பின்னர் நிருபர்களிடம் பேசும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தனது அரசியல் பயணத்தை தொடங்குவதற்காக செவ்வாய்க்கிழமை இரவு ராமேசுவரம் வந்தார் கமல்ஹாசன். புதன்கிழமை காலையில் 7.40 மணிக்கு அப்துல் கலாம் இல்லத்திற்கு சென்றார். அவரை கலாமின் பேரன்கள் ஷேக் தாவுது, ஷேக் சலீம் ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் கலாமின் சகோதரர் ஏ.பி.ஜே. முத்துமீரா மரைக்காயரை கமல்ஹாசன் சந்தித்தார். கமல்ஹாசனின் அரசியல் பயணம் வெற்றி பெற முத்துமீரா மரைக்காயர் ஆசி வழங்கினார். அதனையடுத்து, கலாம் குடும்பத்தினர் கமல்ஹாசனுக்கு நினைவுப் பரிசு வழங்கினர். பின்னர் கலாம் வீட்டில் அமைக்கப்பட்டுள்ள அவரது வாழ்க்கை குறித்த அருங்காட்சியத்தை கமல்ஹாசன் பார்வையிட்டார். பின்னர் அங்கு உணவு அருந்தினார். 
மீனவர் பிரதிநிதிகளுடன் சந்திப்பு: அதன் பின்பு, காலை 9.20 மணிக்கு சம்பை செல்லும் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் கமல்ஹாசனுடன் மீனவ பிரதிநிதிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கமல்ஹாசன் பேசியது:
தமிழகத்தின் மிகப் பெரிய தொழில் மீன்பிடி தொழிலாகும். அதனை பாதுகாக்க வேண்டும். அதேவேளையில் அரசு சொல்வதையும் மீனவர்கள் கேட்க வேண்டும். மீனவர்களின் கோரிக்கைகளை அரசு கேட்க வேண்டும் என்றார். 
பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது கமல்ஹாசன் கூறியது: 
ராமேசுவரத்தில் எளிய குடும்பத்தில் பிறந்த அப்துல்கலாம் எனக்கு மிகவும் முக்கியமான மனிதர். அவரது வீட்டிற்கு சென்றது மகிழ்ச்சியான நிகழ்வு. அவரது குடும்பத்தினருடன் சந்திப்பு திட்டமிட்டதுதான். அதில் அரசியல் இல்லை. கலாமின் நாட்டுப்பற்று என்னை கவர்ந்த விஷயம். அவர் பயின்ற பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று நினைத்தேன். அதிலும் அரசியல் கிடையாது. ஆனால், வர வேண்டாம் என தடை போட்டு விட்டனர். பரவாயில்லை, பள்ளிக்கு செல்லத்தான் தடை. பாடம் படிப்பதை யாரும் தடுக்க முடியாது. எனது திரைப்படங்களில் பல தடைகளை தாண்டி சரித்திரம் படைத்துள்ளேன். அதேபோல அரசியல் பயணத்திலும் தடைகளை எதிர்கொண்டு வெற்றி பெறுவேன். நடிகனாக இருந்து அரசியலுக்கு வருவது வித்தியாசமானது. இதுவும் மக்கள் தொடர்புதான். ஆனால், அதில் இருந்து பொறுப்பைவிட அதிக பொறுப்பும், பெருமையும் இதில் உள்ளது. இதுவரை தமிழ் ரசிகர்கள் உள்ளத்தில் வாழ்ந்து வந்தேன். இப்போது அவர்களின் இல்லங்களில் வாழ ஆசைப்படுகிறேன். 
கட்சியின் கொள்கைகளை பற்றி கவலைப்படுவதைவிட, மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்று பட்டியல் போட வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு என்னிடம் தெரிவித்தார். அதையே பின்பற்ற உள்ளேன். தமிழகத்தில் எந்த விதமான களப் பணியும் இல்லாமல் முதல்வராக வேண்டும் என்ற எண்ணத்தில் நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள் என்று புகார் கூறுகிறார்கள். இந்த தொழிலில் உள்ளவர்கள்தான் அரசியலுக்கு வர வேண்டும் என்று எதுவும் இல்லை. மக்களுக்கு பணியாற்றும் உணர்வும், உத்வேகமும் இருப்பவர்கள் அனைவரும் வரலாம், வர வேண்டும், வாருங்கள் என்றார்.
நிருபர்கள் கூட்டத்தின்போது அங்கு வந்த மீனவர் சங்கத் தலைவர்கள் என்.ஜே. போஸ், தேவதாஸ், சகாயம், ஜேசுராஜ், எமரிட் உள்ளிட்ட பல தலைவர்களை கமல்ஹாசன் அழைத்து, தனக்கு பொன்னாடை போர்த்தும் பழக்கம் கிடையாது என்றும், அதனால் கட்டித்தழுவி கொள்கிறேன் என்றும் கூறி வாழ்த்து தெரிவித்தார்.
நினைவிடத்தில் அஞ்சலி: பின்னர் பேக்கரும்பில் உள்ள அப்துல் கலாம் நினைவிடத்தில் கமல்ஹாசன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அப்போது கலாமின் குடும்பத்தினர் மற்றும் நற்பணி மன்றத்தினர் உடனிருந்தனர்.
'நான் இனிமேல் திரை நட்சத்திரம் அல்ல; உங்கள் வீட்டு விளக்கு'
ராமேசுவரத்தில் அரசியல் பயணத்தை தொடங்கிய கமல்ஹாசனுக்கு மதுரை செல்லும் வழியில் ராமநாதபுரம் அரண்மனை வாசல் பகுதியில் கூடியிருந்தோர் மத்தியில் அவர் பேசியது:
45 ஆண்டுகளுக்கு பிறகு நான் ராமநாதபுரத்துக்கு வந்துள்ளேன். ராமநாதபுரம் ஊர் மாறியிருக்கிறது. ஆனால், மக்கள் மாறவில்லை. இங்கு எனது சித்தப்பா ஆராவமுதனின் வீடு இருக்கிறது. எனவே எனக்கு இங்கு ஒரு வீடு உள்ளது என்று நினைத்திருந்தேன். ஆனால் இங்கிருக்கும் கூட்டத்தை பார்க்கும்போது, இந்த ஊரே எனது சொந்த வீடாக தெரிகிறது. இதுவரை என்னை திரை நட்சத்திரமாக பார்த்திருப்பீர்கள். இனிமேல் நான் திரைப்பட நட்சத்திரம் இல்லை. உங்கள் வீட்டு விளக்கு; அந்த விளக்கை ஏற்றிவைத்து அதை அணையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்களது பொறுப்பு. அவ்வாறு செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக உள்ளது. அரசியல் களத்தில் நான் என்னவாக இருக்க விரும்பினேனோ அதை காணப் போகிறீர்கள் என்றார் கமல்ஹாசன்.

ராமேசுவரம் பேக்கரும்பில் உள்ள மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் சமாதிக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய நடிகர் கமல்ஹாசன். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

SCROLL FOR NEXT