தமிழ்நாடு

புதுவையில் பார்வையற்றோருக்கு இலவச செல்லிடப்பேசி திட்டம்: முதல்வர் நாராயணசாமி தொடக்கி வைத்தார்

DIN

புதுவை அரசு சார்பில், கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச செல்லிடப்பேசி வழங்கும் திட்டத்தை முதல்வர் வே.நாராயணசாமி புதன்கிழமை தொடக்கிவைத்தார்.
புதுவை அரசின் சமூக நலத் துறை மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
40 முதல் 65 சதவீதம் உடல் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1,500, 66 முதல் 85 சதவீதம் ஊனமுற்றோருக்கு ரூ.2,000, 86 சதவீதத்துக்கு மேல் ஊனமுற்றோருக்கு ரூ.3,000 என மாத உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.
மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச அரிசி, கல்வி உதவித்தொகை, மூன்று சக்கர வாகனம், திருமண உதவித்தொகை, பல்வேறு முடநீக்கு கருவிகள் போன்றவையும் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வரிசையில், கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச செல்லிடப்பேசி வழங்கும் திட்டத்தை புதுவை அரசு அறிமுகம் செய்துள்ளது.
இந்தத் திட்டத்தின் அறிமுக நிகழ்ச்சி புதுவை சட்டப்பேரவைக் குழு அறையில் புதன்கிழமை நடைபெற்றது. திட்டத்தை முதல்வர் வே.நாராயணசாமி அறிமுகம் செய்துவைத்தார்.
முதல் கட்டமாக நூறு சதவீத பார்வைத்திறனற்ற மாற்றுத் திறனாளிகள் 55 பேருக்கு இலவச செல்லிடப்பேசிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு சமூக நலத் துறை அமைச்சர் மு.கந்தசாமி தலைமை வகித்தார். பிப்டிக் தலைவர் இரா.சிவா எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
இந்த செல்லிடப்பேசி குறித்து சமூக நலத் துறை துணை இயக்குநர் சரோஜினி கூறியுள்ளதாவது:
செல்லிடப்பேசியில் பயனாளிகள் தாங்கள் தொடர்புகொள்ள வேண்டிய முக்கிய செல்லிடப்பேசி எண்களைப் பதிவு செய்து வைத்து விட்டால் போதும். பதிவு செய்யப்பட்ட குறிப்பிட்ட எண்ணுக்கு அழைப்பு வரும்போது, அழைப்பு வந்த எண்ணுக்குரிய பெயர் சப்தமாக ஒலிக்கும். அந்தப் பெயரைக் கேட்டு தேவைப்பட்டால் அழைப்பை ஏற்கலாம். இல்லையெனில் தவிர்க்க முடியும்.
அதேபோல, செல்லிடப்பேசியில் பதிவு செய்யப்பட்டவரைத் தொடர்புகொள்ள வேண்டும் எனில் அந்தப் பெயரை உச்சரித்து குரல் எழுப்பினால் போதுமானது. பொத்தானை அழுத்த வேண்டிய அவசியம் இல்லை. யார் பெயருக்கு குரல் எழுப்புகிறோமோ அவரது செல்லிடப்பேசிக்கு தானாக அழைப்புச் செல்லும் என்றார். நிகழ்ச்சியில் சமூக நலத் துறை இயக்குநர் சாரங்கபாணி, கண்காணிப்பாளர் அல்லிமுத்து மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

9-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

ஐஏஎஸ் தோ்வில் வென்றவருக்கு என்.ஐ. உயா்கல்வி மையம் சாா்பில் பாராட்டு

சூரியன்விளை பத்ரகாளி கோயிலில் நட்சத்திர மகா யாகம்

சட்ட தன்னாா்வல தொண்டா் பணிக்கு மே 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

தோவாளை - தாழக்குடி இடையே சாலைப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT