மின் துறை அமைச்சர் பி.தங்கமணி முன்னிலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பாக தொழிற்சங்க தலைவர்களுடன் சென்னையில் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்த 
தமிழ்நாடு

மின்வாரிய ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம்: அமைச்சர் முன்னிலையில் கையெழுத்து

மின்வாரிய ஊழியர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தம் வியாழக்கிழை துறையின் அமைச்சர் பி.தங்கமணி முன்னிலையில் கையெழுத்தானது. இதனால் கடந்த 26 மாதங்களாக இருந்த இழுபறி

DIN

மின்வாரிய ஊழியர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தம் வியாழக்கிழமை அத்துறையின் அமைச்சர் பி.தங்கமணி முன்னிலையில் கையெழுத்தானது. இதனால் கடந்த 26 மாதங்களாக இருந்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது.
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கும், மின்வாரிய ஊழியர்களின் தொழிற்சங்கங்களுக்கும் இடையேயான இந்த ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் அண்ணா தொழிற்சங்கம், தொமுச, சிஐடியு ஆகிய 17 அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் உள்பட 37 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் கையெழுத்திட்டனர். நிர்வாகத்தின் தரப்பில் மின்வாரியத்தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் எம்.சாய்குமார் கையெழுத்திட்டார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் மின்வாரிய ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 2.57 காரணி அளவு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் சுமார் 80 ஆயிரம் மின்வாரிய ஊழியர்கள் பயன்பெறுவர்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் விடுதியில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில மின்துறை அமைச்சர் பி.தங்கமணி, எரிசக்தித்துறை செயலர் விக்ரம் கபூர், தொழிலாளர் நல ஆணையர் க.பாலசந்திரன் மற்றும் மின்வாரிய உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஒப்பந்தப் பணியாளர்களைப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும். புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும். ஏற்கெனவே உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பணி அனுபவத்தின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். பயணப்படி அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அனைத்துத் தொழிற்சங்கங்களும் அமைச்சர் முன்னிலையில் வைத்தன.
இந்நிலையில் சிஐடியு தொழிற்சங்க நிர்வாகி எஸ்.எஸ்.சுப்பிரமணியன் பேசுகையில் கடந்த 16-ஆம் தேதி தாங்கள் மேற்கொண்ட வேலை நிறுத்தம் காரணமாகவே, இந்த ஊதிய உயர்வு ஒப்பந்தம் நிறைவேறியிருப்பதாகக் குறிப்பிட்டார். அதற்கு ஆளுங்கட்சி தொழிற்சங்கமான அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்து குரலெழுப்பினர்.
இதைக் கண்டித்த அமைச்சர் மற்ற தொழிற்சங்கத்தினர் அவர்களது கருத்தை தெரிவிக்க முழு உரிமை உள்ளது. அதை யாரும் தடுக்க முடியாது. எனவே அண்ணா தொழிற்சங்கத்தினர் அமைதி காக்க வேண்டும். அவர்களுக்கான பதிலை அமைச்சர் என்ற முறையில் நான் கூறிக்கொள்கிறேன் என்று கூறியதை அடுத்து அமைதி நிலவியது.
பின்னர் நிகழ்ச்சியில் அமைச்சர் பி.தங்கமணி பேசியது: இந்த அரசு தொழிலாளர்களின் நலனைக் காக்கும் அரசாக செயல்படுவதால் தான் இன்றைக்கு அவர்களின் கோரிக்கையை அப்படியே ஏற்று 2.57 காரணி அளவுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக மின்சார வாரியத்தில் 2,654 மின் பணியிடங்கள் உருவாக்கப்படும். தொழிற்சங்கங்களின் கோரிக்கையை ஏற்று பல்வேறு நிலைகளில் புதிதாக இந்தப் பணியிடங்கள் உருவாக்கப்படும். மேலும் மின் வாரிய ஊழியர்களுக்கு வழங்கப்பட உள்ள 2.57 காரணி ஊதிய உயர்வு கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் கணக்கிடப்பட்டு வழங்கப்படும். இதன் காரணமாக மாதத்துக்கு ரூ.109 கோடியும், ஆண்டுக்கு ரூ.1,314 கோடி ரூபாயும் கூடுதல் செலவாகும் . கோடைக் காலத்தில் மின் தேவை அதிகரிக்க கூடும் என்பதை கணக்கில் கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
தற்போது மின்வாரிய ஊழியர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எஞ்சிய மற்றக் கோரிக்கைகள் அனைத்தும் முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று படிப்படியாக நிறைவேற்றப்படும். அதுவரை நீங்கள் அரசு மற்றும் நிர்வாகத்துடன் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்றார் அமைச்சர் பி.தங்கமணி.
யாருக்கு எவ்வளவு ஊதியம் கிடைக்கும்?
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் பணியாளர்களுக்கு அமல்படுத்தப்படவுள்ள புதிய ஊதிய விகிதம் வருமாறு: மாதமொன்றுக்கு களப்பணி உதவியாளருக்கு குறைந்த பட்ச பணப்பலன் ரூ.3,175 ஆகவும் (வீட்டு வாடகைப் படி, மருத்துவப் படி உட்பட) அதிகபட்ச பணப்பலன் ரூ.7,775 ( ஊதியம் + தரஊதியம்) இருக்கும்.
அலுவலர்களுக்கு குறைந்தபட்ச பணப்பலன் ரூ.5,800 ஆகவும், அதிகபட்ச பணப் பலனாக ரூ.27,375 ஆகவும் இருக்கும். வாரியம் 60 ஆண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு ஒரு ஆண்டு ஊதிய உயர்வு 1-12-2015 முதல் வழங்கப்படும். இதனால் 2.57 காரணி ஊதிய உயர்வுடன் ஒரு ஊழியருக்கு (அவர் வகிக்கும் பதவிக்கு ஏற்ப) குறைந்தபட்சமாக ரூ.400, அதிகபட்சமாக ரூ.2,000 வரை பணப்பலன் கிடைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லியோ சாதனையை முறியடித்த ஜன நாயகன்!

2025: ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டம் முதல் கரூர் வரை... நெஞ்சை உலுக்கிய நெரிசல் பலிகள்!

ஆஷஸ் தொடர்: சாதனைப் பட்டியலில் இணைந்த அலெக்ஸ் கேரி!

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

SCROLL FOR NEXT