தமிழ்நாடு

கச்சத்தீவில் புனித அந்தோணியார் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

DIN

இலங்கை மற்றும் இந்திய பக்தர்கள் இணைந்து கொண்டாடும் கச்சத்தீவு புனித அந்தோணியார் கோயில் திருவிழா வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இரு நாட்டு பக்தர்களும் இணைந்து ஆண்டுதோறும் இத்திருவிழாவை கொண்டாடுகின்றனர். இந்த திருவிழாவை முன்னிட்டு கச்சத்தீவுக்கு இலங்கையிலிருந்து சுமார் 4 ஆயிரம் பக்தர்களும், தமிழகத்திலிருந்து 62 படகுகளில் 1920 பேரும் சென்றனர். விழாவின் முதல் நிகழ்ச்சியாக தமிழக பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய கொடிமரத்தில் கோயில் நிர்வாகக்குழுவின் பங்குத் தந்தை யமீன் பவுல்ராஜ் தலைமையில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து இந்திய, இலங்கை பக்தர்கள் இணைந்து சிலுவையை சுமந்து வரும் சிலுவைப்பாதை நிகழ்ச்சியும், புனித அருளானந்தரின் தேர்ப் பவனியும், சிறப்புத் திருப்பலியும் நடந்தன.
விழாவில் யாழ்ப்பாணம் மற்றும் ராமேசுவரம் தீவுப் பங்குத் தந்தையர்கள், அருட் சகோதரிகள் பலரும் கலந்து கொண்டனர். கச்சத்தீவில் இரு நாட்டு பக்தர்களுக்கும் குடிநீர் வசதி,கழிப்பிட வசதி ஆகியனவற்றை இலங்கை கடற்படையினர் செய்திருந்தனர். 
முன்னதாக இலங்கை கடற்படையினர் இந்தியாவில் இருந்து வந்த பக்தர்களையும், அவர்களது பொருள்களையும் தனித்தனியாக சோதனை செய்த பிறகே கச்சத்தீவுக்குள் செல்ல அனுமதித்தனர். சனிக்கிழமை காலையில் சிறப்புத் திருப்பலியும், அதனைத் தொடர்ந்து கொடி இறக்கமும் நடைபெறுகிறது. விழாவில் கலந்து கொண்ட இருநாட்டு பக்தர்களும் மெழுகுவர்த்தியுடன் புனித அருளானந்தரை தரிசனம் செய்து வழிபட்டனர். விழாவில் இலங்கை கடற்படை மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டக் காவல்துறையும் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.விழா முடிந்து சனிக்கிழமை மாலையில் இரு நாட்டு பக்தர்களும் அவரவர் நாடுகளுக்கு திரும்பிச் செல்லவுள்ளனர்.
62 படகுகளில் பயணம்: முன்னதாக கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்பதற்காக 1920 பேர் ராமேசுவரத்திலிருந்து 62 விசைப் படகுகளில் வெள்ளிக்கிழமை காலையில் புறப்பட்டுச் சென்றனர். இவர்களில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 847 பேர்,பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் 916 பேர், பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் 157 பேர் ஆவர். ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி ஏ.கயல்விழி மற்றும் அவரது குடும்பத்தினர், ராமேசுவரம் வேர்க்கோடு பங்குத்தந்தை அந்தோணி சாமி தலைமையில் பங்குத் தந்தையர்கள், அருட் சகோதரிகள் ஆகியோரும் இதில் அடங்குவர். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் அவர்களை வழியனுப்பி வைத்தார். ஆட்சியருடன் மாவட்ட வருவாய் அதிகாரி சி.முத்துமாரியும், இந்திய கடற்படையின் கமாண்டன்ட் பி.நாத், சுங்கத்துறை உதவி ஆணையாளர் ராஜ்குமார் மோசஸ், ராமநாதபுரம் ஏ.டி.எஸ்.பி. எஸ்.வெள்ளத்துரை ,ராமேசுவரம் வட்டாட்சியர் கணபதி காந்தம்,துணை வட்டாட்சியர் அப்துல்ஜப்பார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இயக்குநருக்கு அனுமதி மறுப்பு: திரைப்பட இயக்குநர் கௌதமன் கச்சத்தீவு செல்ல விருப்பமனு அளித்திருந்தும் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் கச்சத்தீவு செல்லும் பக்தர்களை வழியனுப்புவதற்காக ராமேசுவரம்துறைமுகத்துக்கு வந்த அவரை காவல்துறையினர் வழிமறித்து திருப்பி அனுப்பினர். கச்சத்தீவுக்கு செல்லும் 62 விசைப்படகுகளிலும் சிலுவைச் சின்னம் பொறிக்கப்பட்ட வெள்ளைக்கொடி பறக்க விடப்பட்டிருந்தது.பக்தர்கள் பிளாஸ்டிக் பைகள்,கேமரா, விடியோ கேமரா, டார்ச் லைட் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் பொருள்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஒவ்வொருவரும் ரூ.5 ஆயிரம் வரை எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டனர். உணவுகள், தண்ணீர் மற்றும் போர்வை ஆகியனவும் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு முதல் நாட்டுப்படகில் செல்ல உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதால் நாட்டுப்படகில் யாரும் செல்லவில்லை. அதிகாரிகளின் சோதனை காரணமாகவும்,திருவிழாவுக்கு விண்ணப்பித்திருந்த பக்தர்களில் சிலர் வருவதற்கு தாமதம் ஆனதாலும் பக்தர்கள் பலரும் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இவர்களுக்கு ராமேசுவரம் துறைமுகப்பகுதியில் கழிப்பிட வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படாததால் பெண்கள், முதியோர்கள் பலரும் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேளாண்மைக் கல்லூரியில் கலந்துரையாடல்

வாகை சூடினாா் ஸ்வெரெவ்

மே 27-இல் வருங்கால வைப்பு நிதி குறைதீா் முகாம்

தம்பி அடித்துக் கொலை: அண்ணன் கைது

யூடிஎஸ் செயலி பிரசாரக் குழுவுக்கு பாராட்டு

SCROLL FOR NEXT