தமிழ்நாடு

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

DIN

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி ஆருத்ரா தரிசன விழா செவ்வாய்க்கிழமை சிறப்பாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இதைத் தரிசித்தனர்.
பூலோகக் கைலாசம் என அழைக்கப்படும் இந்தக் கோயிலில் ஆருத்ரா தரிசன உற்சவம் கடந்த டிசம்பர் 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேர்த் திருவிழா திங்கள்கிழமைநடைபெற்றது. அன்று இரவு ஆயிரங்கால் மண்டபத்தில் ஸ்ரீ நடராஜமூர்த்திக்கும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளுக்கும் ஏககால லட்சார்ச்சனை நடைபெற்றது. 
தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பாக ஆயிரங்கால் மண்டபம் முகப்பில் நடராஜமூர்த்திக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் மகாபிஷேகம் நடைபெற்றது. இதில், பால், தேன், விபூதி, பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம் உள்ளிட்டவை குடம், குடமாக அபிஷேகம் செய்யப்பட்டன. மகாபிஷேகத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர். 
அதன் தொடர்ச்சியாகஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜமூர்த்திக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் திருவாபரண அலங்காரமும், சிறப்பு அர்ச்சனைகளும் நடைபெற்றன. சித் சபையில் உத்சவ ஆச்சாரியாரால் ரகசிய பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து, பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வந்த பின்னர் பிற்பகல் 3.20 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தின் முன்பாக உள்ள நடனப் பந்தலில் ஸ்ரீமந் நடராஜமூர்த்தியும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளும் முன்னும், பின்னும் 3 முறை சென்று நடனமாடி ஆருத்ரா தரிசன காட்சியளித்தனர். அப்போது, அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 'நடராஜா', 'சிவ சிவா' என கோஷமிட்டு தரிசனத்தை கண்டுகளித்தனர். பின்னர் சித் சபா பிரவேசம் நடைபெற்றது. 
புதன்கிழமை முத்துப் பல்லக்கில் வீதிஉலா நடைபெறுகிறது. உற்சவ ஏற்பாடுகளை பொது தீட்சிதர்களின் செயலர் ச.ராஜகணபதி தீட்சிதர், துணைச் செயலர் என்.ஆர்.சண்முக தீட்சிதர், உற்சவ ஆச்சாரியார் சி.க.கனகசபாபதி தீட்சிதர் ஆகியோர் செய்திருந்தனர்.
ஆருத்ரா தரிசன விழாவைக் காண இலங்கை, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் சிதம்பரம் நகரில் குவிந்தனர். இதையடுத்து, 4 வீதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் வாக்களிக்காதது ஏன்?: ஜோதிகா விளக்கம்!

கண் அழைக்குது..!

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

SCROLL FOR NEXT