நெல்லுக்கான ஆதார விலையால் எந்த ஆதாயமும் இல்லை என காவிரி-டெல்டா விவசாயிகள் உள்பட தமிழகத்தில் நெல் பயிரிடும் அனைத்து விவசாயிகளும் விரக்தியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் ஆண்டுதோறும் சராசரியாக 47.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்படுகிறது. இதில், 40 சதவீதம் காவிரி-டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்படுகிறது. காவிரி- டெல்டா மாவட்டங்களில் குறுவை நெற் பயிரானது ஜூன், ஜூலை மாதங்களில் 3.20 லட்சம் ஏக்கரில் பயிரிடப்படும். சம்பா பயிரானது ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் 11.5 லட்சம் ஏக்கரில் பயிரிடப்படும். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தாளடி பயிர் 3 லட்சம் ஏக்கரில் பயிரிடப்படும். மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரை நம்பியே காவிரி-டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி நடைபெறுகிறது. இவைத் தவிர 80 ஆயிரம் பம்ப் செட்டுகள் மூலமும் நெல் சாகுபடி நடைபெறுகிறது.
ஆண்டுதோறும் சம்பா அறுவடைக்கு முன்பாக உணவுப் பொருள் வழங்கல் துறைச் செயலர், ஆணையர், தமிழ்நாடு நுகர்பொருள் வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குநர், காவிரி டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள் மற்றும் விவசாயிகளின் பிரதிநிதிகள் அடங்கிய முத்தரப்புக் கூடி, நெல்கொள்முதல் விலை அறிவிக்கப்படும்.
மத்திய அரசு அறிவித்துள்ள ஆதார விலையில் இருந்து ஊக்கத்தொகையை சேர்த்து தமிழக அரசானது நெல்லுக்கான ஆதார விலையை அறிவிக்கும்.
ஆனால், மத்திய அரசானது நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிப்பதில் தொடர்ந்து விவசாயிகளை வஞ்சித்து வருகிறது. கடந்த ஜூன் மாதத்தில் நெல்லுக்கு ஆதார விலையாக சன்ன ரகம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1590, பொது ரகம் குவிண்டாலுக்கு ரூ.1550 என மத்திய அரசு நிர்ணயம் செய்தது. இதன் தொடர்ச்சியாக தமிழக அரசு காலதாமதமாக ஆதார விலையை அறிவித்துள்ளது. சன்ன ரகத்துக்கு தமிழக அரசின் ஊக்கத்தொகையாக ரூ.70 சேர்த்து ரூ.1,660 எனவும், பொது ரகத்துக்கு ஊக்கத்தொகையாக ரூ.50 சேர்த்து ரூ.1,600 எனவும் அறிவித்துள்ளது.
வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் தலைமையிலான குழு அறிவித்துள்ளபடியே விளை பொருள்களுக்கு விலை நிர்ணயிக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. இதன்படி, பயிருக்கான உற்பத்தி செலவுடன், கூடுதலாக 50 சதவீதத் தொகையை சேர்த்து கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். இப்போதைய சூழலில் ஒரு குவிண்டால் நெல் உற்பத்தி செய்ய அதிகபட்சமாக ரூ.3,250 செலவிட வேண்டியுள்ளது. வேளாண்மை பல்கலைக் கழகமே இதனை ஒப்புக்கொண்டுள்ள சூழலில், தமிழக அரசு இப்போது அறிவித்துள்ள ஆதார விலையானது யானைப் பசிக்கு சோளப் பொரி என்ற கதையாகவே உள்ளது என்கின்றனர் காவிரி- டெல்டா விவசாயிகள்.
சுருங்கும் சாகுபடி பரப்பு: திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 16 டெல்டா மாவட்டங்களில் 15 ஆண்டுகளுக்கு முன் சாகுபடி பரப்பளவு 26 லட்சம் ஏக்கராக இருந்தது. வறட்சி, வெள்ளம், காவிரி தண்ணீர் பற்றாக்குறை, வீட்டுமனைகள் பெருக்கம் காரணமாக இப்போது இந்த பரப்பளவு 16 லட்சம் ஏக்கராக சுருங்கிவிட்டது. இந்த சூழலில் தொடர்ந்து ஆதார விலையும் அடிமாட்டு விலைக்கு நிர்ணயிக்கப்படுவதால் நெல் சாகுபடி பரப்பும் சுருங்கிவிடும். மேலும், அரசின் இலக்கும் நிறைவேறாமல் போகும். 2017-2018ஆம் ஆண்டுக்கு தமிழக அரசானது 17.80 லட்சம் ஹெக்டேரில் 60 லட்சம் மெட்ரிக் டன் அரிசி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை எய்த முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
குவிண்டாலுக்கு ரூ.3000 வேண்டும்: இப்போதைய நிலவரப்படி நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என்கின்றனர் விவசாயிகள். இதுதொடர்பாக, தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில விவசாய அணித்தலைவர் புலியூர் நாகராஜன் கூறுகையில், தமிழக அரசு அறிவித்துள்ள ஆதார விலை அர்த்தமற்றது. வறட்சி, வெள்ளம், பயிர்க்காப்பீடு நிவாரணம் கிடைக்காதது, கடனை திரும்ப செலுத்த முடியாத நிலையில் விவசாயிகள் தற்கொலை செய்யும் சூழல் உள்ளது. இந்த நிலையில், விவசாயிகளை காப்பாற்றவும், தமிழக உணவு உற்பத்தியை தக்க வைக்கவும் நெல்லுக்கான ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரமாக நிர்ணயிக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.