தமிழ்நாடு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி

DIN

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த எம்.செல்வம் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியை இத்தனை ஆண்டுகளாக ஊரில் உள்ள அனைத்து சமுதாயத்தினரும் சேர்ந்து தான் நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு பல கட்டப் போராட்டங்களுக்குப் பிறகு ஜல்லிக்கட்டு நடந்தது. ஆனால், ஜல்லிக்கட்டு விழா குழுவில் அனைத்து சமுதாயத்தினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக கேட்டபோது தவறுதலாக நடந்துவிட்டதாகவும் 2018 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியில் முறையாக அனைவருக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது. 
ஆனால், நடப்பாண்டிலும் அனைத்து சமுதாயத்தினர் கலந்துகொள்ளும் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படவில்லை. குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்களை மட்டும் விழா கமிட்டியினர் என்று அழைப்பிதழ்களில் அச்சிட்டுள்ளனர். இதனால் ஜல்லிக்கட்டின்போது சாதி மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ஜல்லிக்கட்டு விழாக்குழுவில் அனைத்து சமுதாயத்தினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கவும் அதுவரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக்குழு தரப்பு வழக்குரைஞர் வாதிடுகையில், ஜல்லிக்கட்டு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் குறித்து 30 நாள்களுக்கு முன்பே முறையான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், ஜல்லிக்கட்டு விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக இதுவரை 300 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜல்லிக்கட்டில் அனைத்து சமுதாயத்தினரும் பங்கேற்கலாம் அதில் எவ்வித தடையும் இல்லை. மனுதாரர் குறிப்பிடுவது போல எந்த பிரச்னைகளும் ஏற்பட வாய்ப்பில்லை என்று தெரிவித்தார். இதைப் பதிவு செய்த நீதிபதிகள், மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப நோய்களுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

கோட் நாயகி மீனாட்சி செளத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT