தமிழ்நாடு

நுண்ணீர் பாசன அமைப்புகளுக்கான ஜி.எஸ்.டி. வரியை அரசே செலுத்தும்

DIN

நுண்ணீர் பாசன அமைப்புகளுக்கான ஜி.எஸ்.டி. வரியை அரசே செலுத்தும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்துக்குப் பதிலளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியது:
நுண்ணீர் பாசனத்துக்கு இந்தியாவிலேயே எங்கும் இல்லாத அளவில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், பிற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்க 2011-2012 ஆம் ஆண்டில் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவில் உத்தரவிடப்பட்டு, இந்தத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
இத் திட்டத்தினை தமிழ்நாடு அரசு தொடர்ந்து சிறப்புற செயல்படுத்தி வந்த காரணத்தினால் மத்திய அரசு இந்தத் திட்டத்துக்கு 2016-17-ஆம் ஆண்டில் வழங்கிய ரூ. 110 கோடி மானியத்தை 2017-18ஆம் ஆண்டில் ரூ.285 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கியுள்ளது. இத்துடன், தமிழ்நாடு அரசு தனது பங்கான ரூ.518.75 கோடியும் சேர்த்து ரூ.803.75 கோடி மானியத்தில் நுண்ணீர்ப் பாசன அமைப்புகளை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. 
மத்திய அரசு தற்போது அமல்படுத்திய ஜி.எஸ்.டி. வரி விதிப்பினால் நுண்ணீர்ப் பாசன உபகரணங்களின் விலையானது உயர்ந்தது. விவசாயிகள் இந்த விலை உயர்வினால் பாதிக்கப்படாமல் இருக்க, அரசு முடிவெடுத்து, நுண்ணீர் பாசன அமைப்பிற்கான ஜி.எஸ்.டி வரி விதிப்பினால் விவசாயிகள் செலுத்தும் கூடுதல் நிதியினை, தமிழக அரசே ஏற்று அதற்கான ஆணையை பிறப்பித்துள்ளது. இதன்மூலம், நுண்ணீர் பாசன முறையினை அமைக்க முன்வரும் விவசாயிகளைக் கூடுதல் நிதிச் சுமையிலிருந்து இந்த அரசு பாதுகாத்துள்ளது.
விவசாயத்துக்கு விருது: தமிழகத்தில் இரண்டாம் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தி, விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக உயர்த்திட அதிமுக அரசு, வேளாண்மை துறைக்கு அரிய பல திட்டங்களைக் கொண்டு வந்தது. இதன் விளைவாக, மத்திய அரசின் அதிக விளைச்சலுக்கான கிரிஷி கர்மான் விருதினை 2011-12-இல் தொடங்கி 4 ஆண்டுகள் தமிழக அரசு தொடர்ந்து பெற்று வந்துள்ளது.
வறட்சி நிவாரணம்: தமிழகத்தில் 140 ஆண்டுகளில் இல்லாத வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டதால், மாநிலம் முழுவதும் வறட்சியால் பாதிக்கப்பட்டது என அறிவிக்கப்பட்டதோடு, 33 சதவீதத்துக்கும் அதிகமாக ஏற்பட்ட பயிர் இழப்புக்கு, இடுபொருள் மானியமாக ரூ.2 ஆயிரத்து 247 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து, நேரடியாக ரூ.25.35 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் குறைந்த கால இடைவெளியில் மானியத் தொகை வரவு வைக்கப்பட்டது.
பயிர் காப்பீடு: அரசின் தொடர் நடவடிக்கையால் கடந்த ஆண்டில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 15.37 லட்சம் விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, மாநில அரசு தனது பங்காக ரூ.564.70 கோடியை மானியமாக காப்பீட்டு நிறுவனங்களுக்கு உரிய நேரத்தில் வழங்கியது. இதனால், வறட்சியால் பாதிப்படைந்த 9. 27 லட்சம் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.2 ஆயிரத்து 980 கோடி காப்பீட்டு நிறுவனங்களால் வழங்க ஒப்பளிக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ.2 ஆயிரத்து 546 கோடியே 50 லட்சம் அளவுக்கு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக இத்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே, அதிக அளவு இழப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்குப் பெற்றுக் கொடுத்தது தமிழ்நாடுதான்.
டெல்டா விவசாயிகள்: டெல்டா விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் நோக்கத்துடன், 2017-18ஆம் ஆண்டில் ரூ. 56. 92 கோடி செலவில் குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டமும், ரூ. 41.15 கோடி செலவில் சம்பா சிறப்பு தொகுப்புத் திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது.
மானாவாரி விவசாயிகளின் நலனுக்காக தமிழகத்தில் மற்றுமொரு சிறப்புத் திட்டமாக ரூ. 802.90 கோடி மதிப்பீட்டில் மானாவாரி சிறப்பு தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இது மட்டுமல்லாது, 40 லட்சம் சிறு, குறு விவசாயிகளை ஒருங்கிணைத்து, கூட்டுப் பண்ணைய முறையை ஊக்குவிக்க முதற்கட்டமாக நடப்பாண்டில் ரூ. 100 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் கூட்டுப் பண்ணையத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

SCROLL FOR NEXT