தமிழ்நாடு

சேலத்தில் இலகுரக வானூர்தி தயாரிப்பு ஆலை அமையுங்கள்: மத்திய அரசுக்கு முதல்வர் பழனிசாமி கோரிக்கை

DIN

சேலத்தில் இலகுரக வானூர்திகள் மற்றும் ஹெலிகாப்டர்களைத் தயாரிக்கும் ஆலையை அமைக்க ஆய்வு செய்திட வேண்டுமென மத்திய அரசுக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கோரிக்கை விடுத்தார்.
சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் இந்தக் கோரிக்கையை அவர் முன்வைத்தார். 
ராணுவ தளவாட உற்பத்தியில் புதிய கூட்டுச் செயல்பாடுகளை ஊக்குவிப்பதற்கான இரண்டு நாள் நிகழ்ச்சி சென்னையில் வியாழக்கிழமை தொடங்கியது. இந்த நிகழ்வில் பங்கேற்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஆற்றிய உரை:-
ஆட்டோமொபைல், ஜவுளி, தோல், மின்னணு பொருள்கள், தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் தமிழகம் தனது முன்னணி இடத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. 
கடந்த ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்ட வலுவான சாதகமான தொழில் சூழல் காரணமாகவே இது சாத்தியமானது. தமிழகத்தில் வானூர்தி தொடர்பான பொறியியல் படிப்புகளை 70-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் அளித்து வருகின்றன. இந்த கல்லூரிகள் மூலமாக ஒவ்வொரு ஆண்டும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொறியாளர்கள் படித்து வெளியேறுகிறார்கள். தமிழகத்தைச் சேர்ந்த பொறியாளர்களும், தொழில்நுட்ப வல்லுநர்களும் சர்வதேச அளவிலுள்ள வானூர்தி நிறுவனங்களில் பணியாற்றுகிறார்கள்.
பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களுக்குத் தேவையான வானூர்தி உதிரி பாகங்களை 120-க்கும் மேற்பட்ட தயாரிப்பு நிறுவனங்களும், 700-க்கும் அதிகமான விநியோகஸ்தர்களும் தமிழகத்தில் இருந்து அளித்து வருகிறார்கள். ராணுவ தளவாட கொள்முதல் கொள்கையானது இந்தியாவில் உள்ள தயாரிப்பு நிறுவனங்களுக்கு புதிய சாளரங்களைத் திறந்து விட்டுள்ளது. குறிப்பாக, தமிழகத்தைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு இதனால் பயன் கிடைக்கும்.
வானூர்தி மற்றும் பாதுகாப்பு கொள்கை: வானூர்தி மற்றும் பாதுகாப்புக்கென தனித்துவமான கொள்கையை வகுத்து வெளியிட தமிழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால், வானூர்தி மற்றும் பாதுகாப்புத் துறைகளில் 30 சதவீத பங்கினை நமது மாநிலம் எட்டிட முடியும். மேலும், இதனால், சுமார் 1 லட்சம் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கலாம்.
பராமரிப்பு-பழுதுபார்த்தல்: வானூர்தி தயாரிப்புப் போன்றே, அதனை பராமரித்தல், பழுதுபார்த்தலும் முக்கியமானதாகும். இதனை மையமாகக் கொண்டு சென்னையில் அதற்கென தனித்துவமான வளாகத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும், இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் தங்களது வணிகத்தைத் தொடங்கினால் அதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து தரும்.
பாதுகாப்புத் துறை, ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், இஸ்ரோ போன்ற நிறுவனங்களின் மிகப்பெரிய திட்டங்களை சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் எடுத்துச் செயல்படுத்திட வேண்டும் என்ற மத்திய 
அரசின் கருத்தை வரவேற்கிறோம். இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு எப்போதும் துணை நிற்கும்.
இலகுரக வானூர்தி: தமிழகத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் இலகுரக வானூர்தி மற்றும் ஹெலிகாப்டர்கள் தயாரிப்பு ஆலையை இந்துஸ்தான் வானூர்தி நிறுவனத்தின் மூலமாக மத்திய அரசு நிறுவிட வேண்டுமென கோரிக்கை விடுக்கிறேன். 
அதிகளவிலான நிலங்களைக் கொண்டுள்ள, மையப் பகுதியாக விளங்கக் கூடிய சேலத்தில் அத்தகைய நிறுவனத்தை அமைக்கலாம் என யோசனை தெரிவிக்கிறேன். 
மேலும், கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை நிலையத்தில் பாதுகாப்புத் துறைக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்த்தல் நிலையத்தை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும்.
அனைத்து உதவிகளையும் அளிக்கத் தயார்: நாட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அதிகமுள்ள மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாகும். எனவே, இந்தத் தொழில்களில் முதலீடு செய்ய முன்வரும் முதலீட்டாளர்களுக்கு நிலம், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தரத் தயாராக இருக்கிறோம். ஒற்றைச் சாளர முறையில் அனைத்து அனுமதிகளும் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
இதைத் தொடர்ந்து, பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். ராணுவ தளவாட உற்பத்திப் பிரிவின் செயலாளர் அஜய்குமார் வரவேற்றார். இந்த விழாவில், அமைச்சர்கள் தங்கமணி, எம்.சி.சம்பத், பெஞ்சமின், தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன், முப்படைகளின் துணைத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

SCROLL FOR NEXT