தமிழ்நாடு

நாட்டின் பொருளாதாரம் மேலும் வலுப்பெறும்: குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு

DIN

இந்தியாவில் தயாரிப்போம் திட்டம், அடிப்படை வசதி மேம்பாட்டில் அதிகக் கவனம், உள்நாட்டுத் தேவைகளை உயர்த்த எடுக்கப்பட்டுள்ள பல்முனை நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரம் மேலும் வலுப்பெறும் என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறினார்.
இந்திய ஏற்றுமதி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஏற்றுமதி வர்த்தகத்தில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு விருது வழங்கி குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பேசியது:
சர்வதேச நிதி நெருக்கடி தொடங்கியதில் இருந்து சர்வதேசப் பொருளாதாரம் மெதுவாக மீண்டு வருகிறது. பொருள்கள் விலை ஏற்றத் தாழ்வு, ரூபாய் மதிப்பு நிலையற்ற தன்மை ஆகியவை வளர்ந்த, வளரும் நாடுகளில் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், விற்பனை வர்த்தகம் வளர்ந்துள்ளது. இது 2017-ஆம் ஆண்டில் 3.6 சதவீதம் வளரும் என்று உலக வர்த்தக அமைப்பு மதிப்பிட்டுள்ளது. இது முன்னர் 2.4 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டிருந்தது. 
இதன் மூலம், இந்தியா உள்ளடங்கிய ஆசிய வர்த்தகத்தில் 2017-ஆம் ஆண்டு சிறந்த வளர்ச்சி வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக விரிவடைவது தொடரும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. உள்கட்டமைப்பு, வேளாண் துறை மற்றும் சுகாதாரத் துறை ஆகியவற்றின் வளர்ச்சிக்கு அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்த முயற்சி இந்தியப் பொருளாதாரத்தை மேலும் வளர்ச்சி பெறச் செய்யும்.
இந்தியாவில் தயாரிப்போம் திட்டம், அடிப்படை வசதி மேம்பாட்டில் அதிகக் கவனம், உள்நாட்டுத் தேவைகளை உயர்த்த எடுக்கப்பட்டுள்ள பல்முனை நடவடிக்கை ஆகியவற்றால் நாட்டின் பொருளாதாரம் மேலும் வலுப்பெறும். பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்ட முக்கிய முடிவுகள் வரும் ஆண்டுகளில் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். 
இந்நடவடிக்கைகள் காரணமாக ஏற்றுமதியாளர்கள் சந்தித்த தொடக்கநிலை துயரங்களை நான் அறிவேன். இருப்பினும், ஜிஎஸ்டி கவுன்சில் மற்றும் மத்திய அரசும் உங்களின் துயரங்களை உணர்ந்து அவற்றை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்திய ஏற்றுமதி வளர்ச்சி 2016-17-ஆம் ஆண்டு 4.7 சதவீதம். இது மிதமான வளர்ச்சி குறைவாகும். 
இதற்கு சர்வதேச பொருளாதார மந்தம் உள்பட பல்வேறு வெளிகாரணிகள் காரணமாகும். அதிநவீன துறைமுகங்கள், விமான நிலையங்கள், உற்பத்தி இடங்களை இணைப்பதற்கான உயர்தர நெடுஞ்சாலைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது. இவற்றை சுற்றுச்சூழல் ஆதரவுடன் நிறைவேற்ற கவனம் செலுத்தப்படுகிறது. இருப்பினும், இந்திய ஏற்றுமதியாளர்கள் புதிய சந்தைகள் மற்றும் புதிய பொருள்களில் கவனம் செலுத்தவேண்டும்.
குறிப்பாக உலக வர்த்தகத்தில் உயர் வளர்ச்சியை பதிவு செய்துள்ள மின்சாரப் பொருள்கள், மின்னணுப் பொருள்கள், தொலைத் தொடர்புக் கருவிகள் போன்ற உற்பத்திப் பொருள்கள் உள்ளிட்ட புதிய பொருள்களில் கவனம் செலுத்த வேண்டும் என்றார் வெங்கய்ய நாயுடு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT