முகப்பு
தமிழ்நாடு

பள்ளி மாணவர்களுக்கு தனி ஆதார் மையங்கள் அமைக்கப்படுமா?

பள்ளி மாணவர்களுக்கென தனியாக வட்டார அளவில் ஆதார் மையங்களை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:02 PM
பகிர்:

பள்ளி மாணவர்களுக்கென தனியாக வட்டார அளவில் ஆதார் மையங்களை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 தமிழகம் முழுவதும் கல்வி தகவல் மேலாண்மை முறைமை (எமிஸ்) மூலம் தொடக்கப் பள்ளிகள் முதல் அனைத்துப் பள்ளிகள் வரை மாணவர்களின் அனைத்து விவரங்களும் சேகரிக்கப்பட்டு, அதற்கு தனியாக எண் அளிக்கப்பட்டு விவரங்கள் பாதுகாக்கப்படுகின்றன.
 இந்த நடைமுறையை தமிழகத்தில் நகரப் பகுதிகளில் உள்ள பள்ளிகள் ஏறக்குறைய முழுமையாக முடித்து விட்டன. ஆனால் கிராமப்புற பள்ளிகள் 50 சதவீதம் கூட இப்பணியை முடிக்காத நிலை உள்ளது.
 இதுகுறித்து தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது:
 எமிஸ் திட்டத்தில் மாணவர் விவரங்களைப் பதிவிடும் போது அவர்களின் ஆதார் எண் மிக முக்கியமாகக் கேட்கப்படுகிறது.
 கிராமங்களில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பெரும்பாலும் ஆதார் பதிவு எண் பெறாமலேயே உள்ளனர். அவர்களின் பெற்றோரை நேரில் அழைத்து ஆதார் கண்டிப்பாக எடுக்க வேண்டும் என்று கூறினால், நீங்களே பிள்ளைகளை அழைத்துச் சென்று ஆதார் பதிவு எண் பெற்று கொள்ளுங்கள் என்கிறார்கள்.
 இதனால், கிராமங்களில் இருந்து சொந்த பொறுப்பில் மாணவர்களை நகரில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று அங்கு காத்திருந்து ஆதார் பதிவு எண் பெற்று அவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வருவதில் சிரமம் ஏற்படுகிறது என்றனர்.
 இந்நிலையில் தமிழக அரசு அண்மையில் பிறப்பித்த உத்தரவில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் வட்டார அளவில் பள்ளிகளில் ஆதார் பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும், இப்பதிவு குறித்து வட்டார வள மையக் கணினி இயக்குபவர்களுக்கு ஜனவரி 18 முதல் 24-ஆம் தேதி வரை சென்னை, வேலூர், கடலூர், திருச்சி, கோவை, மதுரை, நெல்லை ஆகிய 7 மாவட்டங்களிலும் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 மேலும், ஆதார் ஆணையம் மூலம் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெறும் கணினி இயக்குபவர்களால் ஆதார் பதிவு பணி மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
 இந்த மையங்களுக்கான அறிவிப்பு வேலூர் மாவட்டத்தில் இதுவரை வெளியாகவில்லை. விரைவில் இந்த அறிவிப்பு வேலூர் மாவட்டத்தில் வெளியிடப்பட்டு ஆதார் மையங்கள் வட்டார அளவில் மாணவர்களுக்காக தனியாக அமைக்கப்பட்டால் மட்டுமே அனைத்து மாணவர்கள் பற்றிய எமிஸ் விவரங்கள் சேகரிக்க இயலும்.
 இந்த விவரங்கள் முழுமையாகச் சேகரிக்கப்பட்டால் மட்டுமே மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் மாநில அளவில் உடனடி நடவடிக்கையை அரசு எடுக்க முடியும்.
 எனவே, மாவட்ட நிர்வாகம் வட்டார அளவில் ஆதார் மையங்களை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே கல்வியாளர்களின் எதிர்பார்ப்பாகும்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.