கோவை, பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் காந்தி, காமராஜர், ஜெயபிரகாஷ் நாராயண் ஆகியோருக்கு அஸ்திக் கும்பம் வைக்கப்பட்டுள்ள இடத்தில் மண்டபம் அமைக்க காந்தியடிகளின் நினைவு நாளில் (ஜனவரி 30) அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு காந்திய சிந்தனையாளர்களிடையே எழுந்துள்ளது.
நம் நாட்டின் விடுதலைக்காகப் போராடிய ஒப்பற்ற தலைவர் மகாத்மா காந்தியடிகள் 1948 ஜனவரி 30-ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இதன் பின்னர், அவரது அஸ்தி உலகம் முழுவதிலும் பல பகுதிகளில் கரைக்கப்பட்டன. மேலும் ஒரு சில பகுதிகளில் அஸ்தி கலசங்கள் வைக்கப்பட்டு மண்டபங்கள் அமைக்கப்பட்டு இன்றளவும் காந்தியின் பெருமைகளைப் பறைசாற்றி வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் பல இடங்களில் காந்தியடிகளின் அஸ்திக் கலசங்கள் வைக்கப்பட்டுள்ளன . இதில், சென்னையிலும், கன்னியாகுமரியிலும் அஸ்திக் கலசம் வைக்கப்பட்டு பிரமாண்ட காந்தி மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதை நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
பேரூரில் காந்தி அஸ்தி மேடை: தமிழகத்தில் மூன்றாவதாக, காந்தியடிகள் மறைந்து 16-ஆவது நாளான 1948 பிப்ரவரி 14-ஆம் தேதி அப்போதைய காந்திய சிந்தனையாளர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்களால் கோவை மாவட்டம், பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் காந்தியடிகளின் அஸ்திக் கும்பம் வைக்கப்பட்டு சுமார் 4 அடிக்கு மேடை அமைக்கப்பட்டது. இங்கு ஆண்டுதோறும் காந்தி பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில் சுதந்திரப் போராட்ட தியாகிகள், காந்திய சிந்தனையாளர்கள், பொதுமக்கள் மரியாதை செலுத்தி வந்தனர்.
இதையடுத்து, சில ஆண்டுகளுக்குப் பிறகு பேரூரில் காந்தி மேடை அருகே காமராஜர், ஜெயபிரகாஷ் நாராயண் ஆகியோரின் அஸ்திக் கலசங்களும் வைக்கப்பட்டு தனித்தனி மேடைகள் அமைக்கப்பட்டன. இதனிடையே, கடந்த சில ஆண்டுகளாக இந்த மேடைகள் போதிய பாரமரிப்பு இல்லாமலும், பொதுமக்களிடம் இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாததாலும் கால்நடைகளின் புகலிடமாகவே காந்தி மேடை மாறிவிட்டது.
பேரூரில் காந்திக்கு மண்டபம் அமைக்க அரசு முன்வர வேண்டும்: இதுகுறித்து கோவை மாவட்டம், அன்னூர், அருகம்பாளையத்தைச் சேர்ந்த காந்திய சிந்தனையாளர் கே.தேவராஜன் கூறியதாவது:
பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் காந்தி, காமராஜர், ஜெயபிரகாஷ் நாராயண் ஆகியோரின் அஸ்திகள் வைக்கப்பட்டுள்ள மேடைகள் போதிய அளவு பராமரிப்பின்றி உள்ளன. நாட்டின் சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட மகாத்மா காந்தியின் அஸ்திக் கலசம் பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் வைக்கப்பட்டு மேடை அமைக்கப்பட்டது குறித்து 20 ஆண்டுகளுக்கு முன்னர் கேள்விப்பட்டேன்.
அதைத்தொடர்ந்து, ஒவ்வோர் ஆண்டும் காந்தி நினைவு நாளுக்கு ஒரு நாள் முன்னரே இங்கு வந்து மேடைகளை சுத்தம் செய்து விட்டுச் செல்வேன். காந்தியடிகளின் நினைவு நாளில் நண்பர்களுடன் இங்கு வந்து அஞ்சலி செலுத்துவதைக் கடமையாகக் கொண்டுள்ளேன்.
தற்போது இந்த மேடையானது போதிய பராமரிப்பின்றி கால்நடைகள் படுத்து உறங்கும் அவல நிலையில் உள்ளது. இதுகுறித்து 2ஆண்டுகளுக்கு முன்னர் சில தன்னார்வலர்கள் உதவியுடன் அஸ்தி மேடையைச் சுற்றி மதில் சுவர் அமைக்க முயற்சி மேற்கொண்டேன்.
ஆனால், இதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்க மறுத்து விட்டனர். காந்தியடிகளைப் பற்றி மாணவர்கள், இளைஞர்கள் தெரிந்து கொள்ளவும், அவரது சிந்தனைகளைப் பின்பற்றி நடக்கவும் அஸ்திக் கும்பம் வைக்கப்பட்டுள்ள இடத்தில் மண்டபம் அமைத்துப் பராமரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
கோவையை அடுத்த பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பராமரிப்பில்லாத காந்தி அஸ்தி மேடை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.