ரயில்களில் செல்லிடப்பேசி திருட்டுகளை தடுக்க தீவிர கவனம்: ரயில்வே ஏடிஜிபி சைலேந்திரபாபு
ரயில்களில் அதிகரித்துள்ள செல்லிடப்பேசி திருட்டுகளைத் தடுப்பதில் தீவிர கவனம் செலுத்தப்படும் என்று ரயில்வே காவல் துறை கூடுதல் இயக்குநர் சி. சைலேந்திரபாபு தெரிவித்தார்.
ரயில்களில் அதிகரித்துள்ள செல்லிடப்பேசி திருட்டுகளைத் தடுப்பதில் தீவிர கவனம் செலுத்தப்படும் என்று ரயில்வே காவல் துறை கூடுதல் இயக்குநர் சி. சைலேந்திரபாபு தெரிவித்தார்.
ஈரோடு ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் ரயில் பயணிகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் நடைபெறும் குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும், குறிப்பாக பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் நோக்கிலும், கூடுதல் பாதுகாப்புப் பணிக்காக நிகழாண்டில் புதிதாகக் பெண் காவலர்கள் 90 பேரும், ஆண் காவலர்கள் 120 பேரும் நியமனம் செய்யப்படவுள்ளனர்.
ரயில் நிலையங்கள் மட்டுமின்றி ரயில்களிலும் போலீஸார் பயணம் செய்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் தேவையான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு முழுமையாக இயங்கி வருகின்றன. ஈரோடு உள்ளிட்ட சில ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அனைத்து ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பெரிய அளவிலான திருட்டு சம்பவங்கள் தடுக்கப்பட்டுள்ளன. ஆனால், ரயில் பயணிகளிடமிருந்து செல்லிடப்பேசிகளைத் திருடும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்த தீவிரக் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்படும். சேலம்-சென்னை ரயிலில் நடந்த ரூ. 5.75 கோடி கொள்ளை சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால் அது குறித்து எதுவும் கூற இயலாது என்றார்.
ஆய்வின்போது, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன், ஈரோடு ரயில்வே காவல் ஆய்வாளர் சங்கீதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.