தமிழ்நாடு

மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் வீரவசந்தராயர் மண்டபத்தை சீரமைக்க கற்கள் பரிசோதனை நிறைவு

தினமணி

மதுரை மீனாட்சிசுந்தரேசுவரர் கோயிலில் தீ விபத்தில் சேதமடைந்துள்ள வீரவசந்தராயர் மண்டபத்தில் கற்கள் பரிசோதனை நிறைவடந்துள்ளதால், சீரமைப்புப் பணியை விரைவில் தொடங்க புதன்கிழமை நடைபெற்ற சிறப்புக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
 மதுரை மீனாட்சிசுந்தரேசுவரர் கோயில் கிழக்குக் கோபுரம் உள்புறத்தில் உள்ள  வீரவசந்தராயர் மண்டபத்தில் கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு திடீரென தீப்பற்றியது. இதில் மண்டபத்தில் 19 தூண்கள் மற்றும் மேற்பகுதி மற்றும்  ஏராளமான கடைகள் எரிந்து சேதமடைந்தன. 
தீயில் சேதமடைந்த வீரவசந்தராயர் மண்டபத்தை சீரமைக்கும் பணிக்காக ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் பாலசுப்பிரமணியன், இந்திய தொழில்நுட்பக் கழக பேராசிரியர் அருண்குமார், ஓய்வு பெற்ற தொல்லியல்துறை கண்காணிப்பாளர் சத்தியமூர்த்தி, மீனாட்சிசுந்தரேசுவரர் கோயில் தக்கார் கருமுத்து தி.கண்ணன், இணை ஆணையர் என்.நடராஜன் உள்ளிட்ட 12 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்தில் சேதமடைந்த வீரசவந்தராயர் மண்டபத்தினை பழமை மாறாமல் புதுப்பிக்க குழுவினர் ஆலோசனை நடத்தினர். அதன்படி தமிழகத்தின் 14 குவாரிகளில் இருந்து கற்கள் சேகரிக்கப்பட்டு சென்னையில் உள்ள மத்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐ.ஐ.டி.) சோதனைக்கு உள்படுத்தப்பட்டது.  இந்தநிலையில், தற்போது கற்களின் உறுதித் தன்மை, நெகிழும் தன்மை உள்ளிட்ட பரிசோதனைகள் நிறைவடைந்து அதன் முடிவுகள் சிறப்புக்குழுவினரிடம் வழங்கப்பட்டுள்ளன.
 இந்நிலையில், புதன்கிழமை காலை சிறப்புக்குழுவின் ஐந்தாவது ஆய்வுக்  கூட்டம் மதுரை மீனாட்சிசுந்தரேசுவரர் கோயில் வளாகத்தில் தக்கார் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் குழு தலைவர் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்றனர். 
 கூட்டத்தில் இதுவரை வீரவசந்தராயர் மண்டபத்தை சீரமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், மண்டபத்தினை புதுப்பிக்க தேர்வு செய்யப்படவுள்ள கற்கள் பரிசோதனை முடிவுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. 
அதன்படி பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்ட தமிழக குவாரிகளில் இருந்து கற்களை எடுத்து கோயில் வளாகத்துக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவும், அதற்காக கனிமவளத்துறையிடம் அனுமதி பெறவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.  அதனால் இன்னும் ஓரிரு வாரங்களில் வீரவசந்தராயர் மண்டபத்தின் சீரமைப்புப் பணிகள் தொடங்க உள்ளதாகவும் கோயில் வட்டாரங்கள் தெரிவித்தன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT