தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் 117 அடியாக உயர்ந்தது: நீர் திறப்பு 30 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

தினமணி

மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 117 அடியாக உயர்ந்தது.
 காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கன மழையின் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பின. இந்த அணைகள் நிரம்பிய பின்னரும் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் இரு அணைகளின் பாதுகாப்புக் கருதி, உபரி நீர் காவிரியில் திறந்து விடப்படுகிறது. உபரி நீர் வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.98 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு நொடிக்கு 61,644 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 20,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 88.73 டி.எம்.சி.யாக இருந்தது.
 120 அடி உயரம், 93.45 டி.எம்.சி. கொள்ளளவும் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.98 அடியாக உயர்ந்த நிலையிலும், அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து இருந்து வருவதால், மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு நொடிக்கு 30 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையங்கள் வழியாக நொடிக்கு 22,500 கன அடி தண்ணீரும், அணையின் உபரி நீர் போக்கியான 16 மதகுகளின் வழியாக நொடிக்கு 7,500 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.
 இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு மேட்டூர் அணையின் கிழக்கு மற்றும் மேற்கு பாசனக் கால்வாய்களில் நொடிக்கு 200 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. கால்வாய் பாசனப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த நொடிக்கு 200 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் எப்போது?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

SCROLL FOR NEXT