தமிழகத்தில்ஆண்டுக்கு 35 ஆயிரம் போராட்டங்கள்
தேசிய அளவில் அதிகரித்து வரும் போராட்டங்களின் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
நாடு முழுவதும் ஆண்டுக்கு சுமார் 1.15 லட்சம் போராட்டங்கள் நடைபெறுகின்றன. கடந்த 2009 -ஆம் ஆண்டுக்கு பின்னர், போராட்டங்கள் 55 சதவீதம் அதிகரித்திருப்பதாக தேசிய காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவிக்கிறது. அதன்படி, நாட்டில் நாள்தோறும் சுமார் 200 போராட்டங்கள் நடைபெறுகின்றன. மொத்த போராட்டங்களில் அரசியல் கட்சிகள் 25.28 சதவீதமும், அரசு ஊழியர்கள் 19.92 சதவீதமும், தொழிலாளர்கள் 11.21 சதவீதமும், மாணவர்கள் 8.81 சதவீதமும், மதம் மற்றும் ஜாதி அமைப்புகள் 5.69 சதவீதமும் இடம்பெறுவது தெரியவந்துள்ளது.
தமிழகம் முன்னிலை: அதிக போராட்டங்கள் நடைபெறும் மாநிலங்களில் கர்நாடகம், தமிழகம், பஞ்சாப், மத்தியப் பிரதேசம், மகராஷ்டிரம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன. இம்மாநிலங்களில் தான் மொத்த போராட்டங்களில் 50 சதவீதம் நடைபெறுகின்றன. அதிலும் 25 சதவீத போராட்டங்கள் தமிழகத்தில் மட்டுமே நடைபெறுகின்றன என்று தேசிய காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம் முதல் இரண்டு இடத்துக்குள்ளே பல ஆண்டுகளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. தமிழகத்தில் ஜாதி ரீதியிலான போராட்டங்கள் அதிகம் நடைபெறுவதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவிக்கிறது. ஆண்டுக்கு சராசரியாக 20 ஆயிரம் போராட்டங்கள் நடைபெற்றுவந்த நிலையில், இதன் எண்ணிக்கை தற்போது 35 ஆயிரத்தைக் கடந்துவிட்டதாக தமிழக காவல்துறை உயர் அதிகாரிகள் கூறுகின்றனர்.
அதேசமயம், போராட்டங்களில் வன்முறை, போலீஸார் தடியடி, துப்பாக்கிச்சூடு போன்ற சம்பவங்கள் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் கடைசி இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் காஷ்மீர், தில்லி, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் முதல் வரிசையில் இருக்கின்றன.
அனுமதியின்றி போராட்டங்கள்: 2015 வரை தமிழகத்தில் காவல் துறையின் அனுமதி பெற்று நடைபெறும் போராட்டங்களே அதிகம் இருந்தன. ஆனால் இப்போது அனுமதியின்றி நடத்தப்படும் போராட்டங்களின் எண்ணிக்கை 30 சதவீதத்துக்கு மேல் அதிகரித்திருப்பதாக காவல் துறை கூறுகிறது. உதாரணமாக சென்னையில் கடந்த 2014 -ஆம் ஆண்டு அனுமதி பெற்ற போராட்டங்களின் எண்ணிக்கை 1,604, அனுமதியின்றி நடத்தப்பட்டவை 212. இதுவே 2017 -இல் அனுமதி பெற்று நடத்தப்பட்ட போராட்டங்களின் எண்ணிக்கை 1,093, அனுமதியின்றி நடத்தப்பட்டவை 1,383.
காவல் பணியில் பாதிப்பு: சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழகத்தில் அரசியல் கட்சிகள், மாணவர் இயக்கங்கள், அரசு ஊழியர் சங்கங்கள் ஆகியோர் நடத்தும் போராட்டங்களே அதிகம் இருந்தன. இப்போது விவசாய சங்கத்தினர், தமிழ் இயக்கத்தினர், சுற்றுச்சூழல் சார்ந்த இயக்கங்கள், தொண்டு நிறுவனங்கள் நடத்தும் போராட்டங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது என்கின்றனர் காவல்துறை அதிகாரிகள்.
இதனால் காவல் பணியைவிட போராட்டங்களை சமாளிக்க அதிக கவனம் செலுத்த வேண்டிய நிலை இருப்பதால், காவல்துறையின் சட்டம் -ஒழுங்கு பராமரிப்பு, ரோந்து மற்றும் கண்காணிப்பு, குற்றவாளிகளை கைது செய்வது போன்ற பணிகளில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனால் குற்றத்தடுப்பு, குற்ற வழக்குகளில் துப்பு துலக்குவதில் பின்னடைவும் ஏற்படுகிறது.
இப்பிரச்னையில் அரசு, போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டுவதைவிட, கொள்கை ரீதியிலான தெளிவான முடிவுகளை எடுத்து அதுகுறித்து பொதுமக்களிடமும், போராட்டக்காரர்களிடமும் புரிதலை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் இப்போதுள்ள போராட்ட சூழலில் இருந்து மாநிலத்தை எளிதாக மீட்டெடுக்க முடியும் என்றும் காவல்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.