சென்னை: நடத்துனர் இல்லாமல் பேருந்தினை இயக்குவதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவினை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட தடங்களில் நடத்துனர் இல்லாமல் பேருந்தினை இயக்குவது என்று தமிழக அரசு சமீபத்தில் முடிவெடுத்து அதனை செயல்படுத்தியும் வருகிறது. அரசின் இந்த நடவடிக்கைக்கு போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
அரசின் முடிவுக்கு எதிராக தமிழ்நாடு போக்குவரத்து ஊழியர் கூட்டமைப்பு என்னும் அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.இந்த வழக்கானது புதன்கிழமையன்று விசாரணைக்கு வந்தது.
அப்பொழுது தமிழக அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், 'இந்த நடத்துனர் இல்லா பேருந்து சேவையானது குறிப்பிட்ட பாய்ண்ட் டூ பாய்ண்ட் வழித்தடங்களில் மட்டும் இயக்கப்படுகிறது. அதேநேரம் பயணிகளின் பாதுகாப்புக்கு ஏற்ற வகையில் நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது' என்று தெரிவித்தார்.
அரசின் இந்த வாதத்தினை ஏற்றுக் கொண்ட நீதிமன்றமானது அரசின் இத்தகைய கொள்கை முடிவுகளில் தலையிட இயலாது என்று கூறி, மனுவினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.