பி.இ. மாணவர் சேர்க்கை: ரேண்டம் எண் வெளியானது
பி.இ. படிப்பில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான சம வாய்ப்பு எண் ("ரேண்டம் எண்') இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்டது.
பி.இ. படிப்பில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான சம வாய்ப்பு எண் ("ரேண்டம் எண்') செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. அமைச்சர் அன்பழகன், முதன்மை செயலாளர் சுனில்பாலிவால் மற்றும் துணை வேந்தர் சூரப்பா ஆகியோரது முன்னிலையில் வெளியிடப்பட்டது.
மாணவர்கள் தங்களுக்கான சம வாய்ப்பு எண்ணை https://tnea.ac.in என்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது.
இந்த ஆண்டு முதன் முறையாக கலந்தாய்வு ஆன்-லைனில் நடத்தப்படுகிறது. இதனால், மாணவர்கள் சென்னைக்கு வராமல், அவரவர் வீட்டில் இருந்தபடியே கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
வீட்டில் இணையதள வசதி இல்லாத மாணவர்களுக்காகவும், அனைத்து மாணவர்களின் அசல் சான்றிதழ் சரிபார்ப்புக்காகவும் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் 42 கலந்தாய்வு உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
1.59 லட்சம் பேர் விண்ணப்பம்: ஆன்-லைன் கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்களுக்கான ஆன்-லைன் விண்ணப்பப் பதிவு மே 3 ஆம் தேதி தொடங்கி ஜூன் 2-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. 1,59,631 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துப் பதிவு செய்துள்ளனர். இது கடந்த ஆண்டைவிட அதிகமாகும். கடந்த 2017-18-ஆம் கல்வியாண்டில் பி.இ. கலந்தாய்வில் பங்கேற்க 1,40,844 பேர் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர்.
சம வாய்ப்பு எண் எதற்கு?
பி.இ. கலந்தாய்வில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே கட் ஆஃப் மதிப்பெண் பெறும்போது, அவர்களில் யாருக்கு முன்னுரிமை அளிப்பது என்ற கேள்வி எழும். அப்போது கணிதப் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்றவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கணித மதிப்பெண் ஒரே மாதிரியாக இருக்கும்போது, இயற்பியல் பாட மதிப்பெண் கருத்தில் கொள்ளப்படும். அதுவும் சமமாக இருக்குமானால், பிளஸ்-2 நான்காவது பாட மதிப்பெண் கருத்தில் கொள்ளப்படும்.
இந்த பாட மதிப்பெண்கள் அனைத்தும் சமமாக இருக்குமானால், பிறந்த தேதி அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும். பிறந்த தேதியும் சமமாக இருக்கும்போது, சம வாய்ப்பு எண் அடிப்படையில் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
ஜூன் 8 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு:
ஆன்-லைன் பி.இ. கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு 42 உதவி மையங்களிலும் ஜூன் 8-ஆம் தேதி தொடங்கி ஜூன் 14-ஆம் தேதி வரை நடத்தப்படும். சான்றிதழ் சரிபார்ப்புக்கு மாணவர்கள் செல்ல வேண்டிய தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்கள், அவர்கள் பதிவு செய்துள்ள செல்லிடப்பேசி எண்ணுக்கும், மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பப்படும்.
அது மட்டுமின்றி, அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் திங்கள்கிழமை (ஜூன் 4) முதல் மாணவர்கள் லாகின் செய்து இந்த விவரங்களைப் பார்த்துக் கொள்ளலாம் என தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறினார்.