தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: ஆணைய நீதிபதி 2 ஆவது நாளாக விசாரணை
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை பல்வேறு இடங்களில் நேரடியாக பார்வையிட்டு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை பல்வேறு இடங்களில் நேரடியாக பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, கடந்த மாதம் 22-ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு, அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடியில் திங்கள்கிழமை பல்வேறு இடங்களில் அருணா ஜெகதீசன் விசாரணை மேற்கொண்டார்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குச் சென்ற அவர், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களிடம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சண்முகம், ரஞ்சித்குமார், கந்தையா ஆகிய மூவரின் வீடுகளுக்கு நேரில் சென்று குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தினர்.
2-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை, போராட்டத்தின்போது தூத்துக்குடி பனிமயமாதா பேராலய வளாகத்தில் இருந்து பேரணி தொடங்கிய இடத்தைப் பார்வையிட்டார். தொடர்ந்து, மினி சகாயபுரத்தைச் சேர்ந்த, துப்பாக்கிச்சூட்டில் இறந்த ஸ்லோனின், கார்த்திக், மணிராஜ் ஆகியோரின் வீடுகளுக்கு சென்று நேரில் விசாரணை நடத்தினார். அப்போது மணிராஜின் தாய் பாலஜானகி, மனைவி அனுஷியா ஆகியோரிடம் அரசு அறிவித்த ரூ. 20 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட வருவாய் அலுவலர் மு.வீரப்பன் வழங்கினார்.
தொடர்ச்சியாக, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், சேதமடைந்த அலுவலக ஜன்னல் கண்ணாடிகளையும், முற்றிலுமாக எரிந்த வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை அருணா ஜெகதீசன் பார்வையிட்டார்.