பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை: ராமதாஸ் வரவேற்பு
பிளாஸ்டிக் பொருள்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
பிளாஸ்டிக் பொருள்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: பிளாஸ்டிக் தாள், தட்டு, கைப்பை, உறிஞ்சிகள் ஆகியவற்றைத் தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், விற்பனை செய்யவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. 2019-ஆம் ஆண்டு ஜனவரி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ள தமிழக அரசின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது.
ஆனால், மக்காத ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தமிழ்நாடு அரசு தடை விதிப்பது இது முதல்முறை அல்ல. பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டுக்கு தடை விதிக்கும் சட்டத்தை 2002-ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் ஜெயலலிதா அறிவித்தார்.
ஆனால், 2003-ஆம் ஆண்டு அன்று வெளிப்படையான காரணம் எதுவும் இன்றி அந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற்றார். அப்போது அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், 15 ஆண்டுகள் கழித்து மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய பிளாஸ்டிக் தடை அறிவிப்பை தமிழக அரசு உறுதியாக செயல்படுத்த வேண்டும் என்று அறிக்கையில் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.