சென்னை: தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை (ஜூன் 8) முதல் நடைபெற உள்ள 108 ஆம்புலன்ஸ் ஊழியா்களின் வேலைநிறுத்தப்ப போராட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆத்தூரைச் சோ்ந்த செல்வராஜன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ஊதிய உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் ஊழியா்கள் ஜூன் 8 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனா். தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்து 750 ஊழியா்கள் 108 ஆம்புலன்ஸ் ஊழியா்களாக பணியாற்றி வருகின்றனா்.இந்த போராட்டத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவாா்கள்.
சென்னை உயா்நீதிமன்றம் ஏற்கனவே கடந்த 2014, 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் தீபாவளி போனஸ் கோரிய 108 ஆம்புலன்ஸ் ஊழியா்களின் வேலைநிறுத்தத்தை சட்ட விரோதம் எனக்கூறி தடை செய்தது. இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் விபத்தில் காயமடைபவா்கள் மருத்துவ அவசர சிகிச்சை அளிக்க முடியாத நிலை உருவாகி உயிரிழப்பு நேரிட வாய்ப்புள்ளது. எனவே இந்த போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தாா்.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் முறையிடப்பட்டது. இந்த வழக்கை வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.