தமிழ்நாடு

மதுரை, சென்னை அரசு மருத்துவமனைகளில் பாலியல் மாற்று அறுவைச் சிகிச்சைக்கு ஏற்பாடு: தமிழக சுகாதாரத் துறைச் செயலர்

DIN

மதுரை மற்றும் சென்னை அரசு மருத்துவமனைகளில் பாலியல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாக தமிழக சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மதுரை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் மத்திய அரசின் நிதியுதவியுடன் ரூ.150 கோடியில் கட்டப்பட்டு வரும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டுமானப் பணிகளை தமிழக சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், மதுரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவுடன் இணைந்து வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்குமாறு கட்டுமான நிறுவனத்துக்கு அறிவுறுத்தினார். 
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மதுரையில் கட்டப்பட்டு வரும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை திறப்பது தாமதமாகி வருகிறது. எனவே பணிகள் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. தற்போது மேல் தளங்களில் 90 சதவீதப் பணிகள் முடிவடைந்துள்ளன. அடுத்த மாதம் ஜூலை இறுதியில் இம்மருத்துவமனையின் வெளிநோயாளிகள் பிரிவை திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 5 இடங்கள் அடங்கிய பட்டியல் மத்திய அரசிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு அறிவிக்கும் இடத்தில் நிலம் உள்ளிட்ட வசதிகள் மாநில அரசு சார்பில் செய்துகொடுக்கப்படும். அண்மையில் மத்திய சுகாதாரத் துறைச் செயலரை சந்தித்து எய்ம்ஸ் அமையும் இடத்தை தாமதமின்றி அறிவிக்குமாறு வலியுறுத்தியுள்ளோம். அரசு மருத்துவமனைகளில் நோயாளிடம் பணம் வாங்கும் ஊழியர்கள் உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதன் நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இங்கு முறைகேடுகளை தடுக்க மருத்துவர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதர மாநிலங்களோடு ஒப்பிடும்போது சுகாதாரத்துறையில் தமிழகம் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது. 
கேரளத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்ட பின் டெங்கு காய்ச்சல் அறிகுறி தோன்றியுள்ளது. எனவே கடந்த ஆண்டு அனுபவத்தை முன்வைத்து தமிழகத்தில் மாவட்ட அளவில் டெங்கு தடுப்பு பணிகளை ஆட்சியர்களுடன் இணைந்து சுகாதாரத்துறை முன்னெடுத்துள்ளது.
மதுரை மற்றும் சென்னை அரசு மருத்துவமனைகளில் பாலியல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பில் கடந்த 5 ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களும், பட்டமேற்படிப்பில் 500-க்கும் மேற்பட்ட இடங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஹார்மோன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான மருந்துகள் மிகவும் விலை உயர்ந்தவை என்பதால் முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. மதுரை அரசு மருத்துவமனையில் 15 குழந்தைகள் தற்போது சிகிச்சை பெறுகின்றனர் என்றார்.
இதைத்தொடர்ந்து ஹார்மோன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை அவர் சந்தித்துப் பேசினார். இந்த ஆய்வின்போது, அரசு மருத்துவமனை முதல்வர் டி.மருதுபாண்டியன், சுகாதாரத் துறை துணை இயக்குநர் கே.வி.அர்ஜுன் குமார், மருத்துவமனை கண்காணிப்பாளர் ஷீலா ராணி மல்லிகா, தமிழக மருத்துவக் கவுன்சில் தலைவர் கே.செந்தில் மற்றும் துறைத் தலைவர்கள், மருத்துவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைப்பேசி திருடிய கும்பலுடன் மோதல்: மும்பை காவலா் விஷ ஊசி செலுத்தி கொலை

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் வழக்கு: தொல்லியல் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

மத சுதந்திர மீறல்கள் குறித்த அமெரிக்க ஆணைய அறிக்கை: இந்தியா கண்டனம்

திருச்செந்தூா் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு?

இலஞ்சி பாரத் பள்ளியில் உழைப்பாளா் தின கொண்டாட்டம்

SCROLL FOR NEXT