தமிழ்நாடு

தமிழகத்துக்கு காவிரி நீர் வழங்குவதில் எந்த சிக்கலும் இல்லை: தேவெ கெளடா

DIN

தமிழகத்துக்கு காவிரி நீர் வழங்குவதில் எந்தச் சிக்கலும் இல்லை என்று முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியின் தேசியத் தலைவருமான தேவெ கௌடா கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே கனிமங்கலம் கிராமத்தில் புதிதாக ஸ்ரீ கரகம்மா, லகுமம்மா தேவி கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இவ் விழாவில், தேவகெளடா கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். 
பின்னர் செய்தியாளர்களிடம் தேவெகௌடா கூறியது: கர்நாடக மாநிலத்தில் மழை பெய்து வருவதால் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் வழங்குவதில் எந்தச் சிக்கலும் இல்லை. ஜூன் மாதத்தில் நடுவர் நீதிமன்றம் குறிப்பிட்டதை விட, அதிகளவில் தண்ணீர் தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. அதற்கு கர்நாடகத்தில் கனமழை பெய்து வருவதே காரணமாகும். மேலும், 177 டி.எம்.சி. தண்ணீர் வழங்குவதை, கர்நாடகம் தடை செய்யாது. காவிரி விவகாரத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை. கர்நாடகத்தில் 4 அணைகள் உள்ளன. 
இந்த அணைகளில் 10 நாள்களுக்கு ஒருமுறை, நீர்மட்டம் குறித்து ஆராய்ந்து முடிவெடுக்கும் உரிமை ஆணையத்திடம் உள்ளது. நீர் இருப்பு குறித்து ஆராய்ந்து, என்ன மாதிரியான பயிர்களை நடவு செய்ய வேண்டும் என்று அவர்கள் ஆலோசனை வழங்குவார்கள். அதன்படி விவசாயிகள் ஒத்துழைப்பு தந்து, பயிர்களை நடவு செய்ய வேண்டும். 
காவிரி விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசனின் நிலைப்பாடு மீண்டும் பேச்சுவார்த்தை என்பதாக இருப்பினும், அது இரு மாநில விவசாயிகளின் வாழ்வாதாரம் என்பதால், அனைத்துத் தரப்பும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். கர்நாடக மாநிலத்தில், விவசாய முறையை மாற்றி அமைக்க வேண்டியுள்ளது.
இது சம்பந்தமாக, முதல்வர் குமாரசாமி, பிரதமர் மோடி மற்றும் மத்திய நீர்வளத்துறை செயலாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்றார். 
இந்தப் பேட்டியின்போது, தமிழக இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, ஒசூர் நகர அ.தி.மு.க. செயலர் எஸ்.நாராயணன் ஆகியோர் உடனிருந்தனர். மேலும், விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ.பி.வெங்கடசாமி, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம், ஜலகண்டபுரம் மேம்பாலம் அருகே 3 உடல்கள்: கொலையா?

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

SCROLL FOR NEXT