தமிழ்நாடு

ராமேசுவரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு விரைவில் சுற்றுலாப் படகுப் போக்குவரத்து : அமைச்சர் மணிகண்டன் தகவல்

DIN

ராமேசுவரத்திலிருந்து, கன்னியாகுமரிக்கு விரைவில் சுற்றுலாப் படகுப் போக்குவரத்து தொடங்க இருப்பதாக தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மு.மணிகண்டன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊராட்சி மன்ற கூட்ட அரங்கில் வளர்ச்சிப்பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைமை வகித்து அமைச்சர் மு.மணிகண்டன் பேசியது: ராமநாதபுரத்திலும், விருதுநகரிலும் மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசிடம் முதல்வர் மூலமாகவே கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ராமேசுவரத்தில் அரசு கலைக்கல்லூரி அமைக்கவும் முதல்வரிடம் கோரிக்கை வைத்திருக்கிறேன். 

தகவல் தொழில்நுட்ப பூங்கா: ராமநாதபுரத்தில் சட்டக் கல்லூரிக்கு புதிதாக கட்டடம் கட்டவும், தகவல் தொழில் நுட்பப் பூங்கா அமைக்கவும் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் சிதிலமடைந்துள்ள 3 வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளையும் இடித்து விட்டு, புதிய வீடுகள் கட்டித்தருமாறு துணை முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். 

படகுப் போக்குவரத்து: சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சுற்றுலாப் பயணிகள் பாம்பன் பாலத்தில் இருந்து, ராமேசுவரம் சென்று சுவாமி தரிசனம் செய்து விட்டு, அங்கிருந்து கன்னியாகுமரியில் உள்ள சுவாமி விவேகானந்தர் பாறைக்கு செல்லும் வகையில் விரைவில் படகுப் போக்குவரத்து தொடங்கப்படும். அதேபோல பாம்பன் குந்துகாலிலிருந்து, தனுஷ்கோடி அருகேயுள்ள அரிச்சல்முனை வரையிலான படகு போக்குவரத்து தொடங்கும் திட்டமும் உள்ளது. 

குந்துகாலில் சுவாமி விவேகானந்தர் நினைவிடத்தில் ஒலி,ஒளி காட்சிகள் அமைக்கவும், தனுஷ்கோடியில் ரூ.4.3 கோடியில் பழமையான புராதனச் சின்னங்களை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பயணிகள் விமான நிலையம்: ராமேசுவரத்தில் பேட்டரி கார் வசதியும், பூங்கா அமைக்கவும் என மொத்தம் ரூ.15 கோடி மதிப்பில் சுற்றுலா தொடர்பான திட்டங்கள் நிறைவேற்றப்படவுள்ளது. 

ராமநாதபுரத்தில் தகவல் தொழில் நுட்பப் பூங்கா அமையவிருப்பதால் மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் உச்சிப்புளி அருகேயுள்ள பருந்து கடற்படை விமானதளம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. 

அதே இடத்தில் பயணிகள் விமான நிலையத்தை விரைவில் அமைக்கவும், மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளும் தீவிரமாக நடந்து வருவதால் உச்சிப்புளியில் விரைவில் பயணிகள் விமான நிலையம் அமையும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

SCROLL FOR NEXT