தமிழ்நாடு

மதுரையில் ‘எய்ம்ஸ்' மருத்துவமனை

DIN

தமிழகத்தில் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) மதுரை மாவட்டம் தோப்பூரில் ரூ.1500 கோடி செலவில் அமைய உள்ளது.

மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை இறுதி செய்து அதற்கான அறிவிப்பை கடிதம் மூலம் தமிழக சுகாதாரத் துறையின் முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணனுக்கு மத்திய சுகாதாரத் துறையின் பிரதான் மந்திரி ஸ்வஸ்த்ய சுரக்ஷô யோஜனா' திட்ட இயக்குநர் சஞ்சய் ராய் அனுப்பியுள்ளார். அதன்படி, ரூ.1,500 கோடி செலவில் மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது.

முதல்வர் பேட்டி: இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை அளித்த பேட்டி: 

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க ஐந்து இடங்கள் தேர்வு செய்யப்பட்டு தமிழக அரசால் பரிந்துரைக்கப்பட்டன. அதன்படி, மதுரை அருகிலுள்ள தோப்பூரில் ரூ.1,500 கோடி மதிப்பில் மருத்துவமனை அமைய உள்ளது. இதற்கான தகவலை சுகாதாரத் துறைச் செயலருக்கு மத்திய அரசு அனுப்பியுள்ளது. 

100 எம்.பி.பி.எஸ். இடங்கள், 750 படுக்கை வசதிகள்: தோப்பூரில் 750 படுக்கை வசதிகளுடன் கூடிய நவீன மருத்துவமனையுடன் 100 எம்.பி.பி.எஸ். இடங்கள் உருவாக்கப்படும். 60 செவிலியர்கள் பயிற்சி பெறும் வசதிகள் செய்யப்படும். எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்பதற்கு தமிழக அரசால் அனைத்து உதவிகளும் செய்யப்படும். இந்த விஷயத்தில் விரைந்து செயல்பட்ட மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்ற பிறகு 2015 பிப். 28-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய நிதிநிலை அறிக்கையில் பிரதான் மந்திரி ஸ்வஸ்த்ய சுரக்ஷô யோஜனா' திட்டத்தின் கீழ் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், தமிழ்நாடு, ஹிமாசலப் பிரதேசம், அஸ்ஸாம் மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை நிறுவப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்தார். அதற்கு முன்னதாகவே தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று 2014-இல் பிரதமருக்கு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார். 
மத்தியக் குழுவினர் ஆய்வு: மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக செங்கல்பட்டு, தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி, ஈரோடு பெருந்துறை, புதுக்கோட்டை, மதுரை மாவட்டம் தோப்பூர் ஆகிய ஐந்து இடங்களைத் தேர்வு செய்து தமிழக அரசு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது.

அந்த இடங்களை மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் தாத்ரி பாண்டா தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் கடந்த 2015 ஏப்.25-இல் ஆய்வு செய்தனர்.

தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்கள் சர்வதேச விமான நிலையம், ரயில் நிலையம் ஆகியவற்றின் அருகில் உள்ளதா, தேசிய நெடுஞ்சாலையின் அருகில் உள்ளதா, சாலைகள் சீராக உள்ளதா எனவும் ஆய்வு செய்யப்பட்டது. அந்தந்தப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள், விவசாயிகள், சிறு, குறு, தொழில் செய்பவர்கள், தொழிலதிபர்கள் ஆகியோரின் கருத்துகளும் பெறப்பட்டு மத்தியக் குழுவினர் அறிக்கையைத் தாக்கல் செய்தனர்.

தாமதமாக அறிவிப்பு: அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகியும் மருத்துவமனை அமைவதற்கான இடம் இறுதி செய்யப்படாமல் தாமதிக்கப்பட்டு வந்தது. மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தோடு அறிவிக்கப்பட்ட பிற மாநிலங்களில் இடங்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்ட நிலையில் தமிழகத்தில் மட்டும் இடம் இறுதி செய்யப்படாமல் இருந்தது. இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டு நடைபெற்று வந்தது.
இந்நிலையில் தமிழகத்துக்கு வரும் மத்திய சுகாராத் துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளும், தில்லிக்குச் செல்லும் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளும் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடம் குறித்து விரைவில் முடிவு தெரியும் என்று தெரிவித்து வந்தனர்.

இடம் தேர்வு: தில்லியில் கடந்த ஜூன் 18-ஆம் தேதி மத்திய சுகாதாரத் துறை ஆலோசனைக் கூட்டத்தில் மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான அறிவிப்பைத் தெரிவிக்கும் கடிதம் தமிழக சுகாதாரத் துறைக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பப்பட்டுள்ளது. இதனால் மூன்று ஆண்டுகளாக நீடித்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது.

கட்டுமானம் எப்போது தொடங்கும்?: தமிழக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்பது தொடர்பான திட்ட அறிக்கையை தயார் செய்து, அதனைத் தீர்மானமாக நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். அதனை மத்திய அரசு ஏற்றுக்கொண்ட பின்னர்தான் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்று சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மத்திய அரசின் 5 நிபந்தனைகள்!
1. மருத்துவமனை அமைய உள்ள பகுதியில் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை அமைக்க வேண்டும். 

2. அந்த இடத்துக்கு இரண்டு மின்னூட்டிகள் மூலம் 20 மெகாவாட் மின்சாரத்தையும், தேவையான தண்ணீர் வசதியையும் செய்து தர வேண்டும். 
3. தோப்பூரில் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் வில்லங்கம் எதுவும் இல்லாமலும், ஆக்கிரமிப்புகள் இல்லாமலும் மத்திய அரசுக்கு ஒப்படைக்க வேண்டும்.
4. எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் செல்லும் குறைந்த மின்அழுத்த மின்கம்பிகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.

5. மருத்துவமனையின் கட்டட வரைபடத்தை இறுதி செய்வதற்கு முன்பாக இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் தேவையான ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் தோப்பூரில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கட்டமைப்புகள் ஏற்கெனவே உள்ளன.

பிரதமருக்கு முதல்வர் நன்றி
மதுரை அருகே எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்ற மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்து எழுதிய கடித விவரம்:

புதிதாக அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) அமைக்க மதுரை மாவட்டம் தோப்பூரைத் தேர்வு செய்தமைக்காக தமிழக மக்களின் சார்பிலும், எனது தனிப்பட்ட முறையிலும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என்பதில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மிகவும் அக்கறையுடன் இருந்தார்.

பொதுத்துறை நிறுவனத்தின் சார்பில் அளிக்கப்படும் தரமான மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி மற்றும் உயர்தர சுகாதார பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவற்றின் பலன்கள் ஏழை-எளிய மற்றும் நடுத்தர மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதிலும் அவர் உறுதியுடன் இருந்தார்.

எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்காக ஐந்து இடங்களை மாநில அரசு தெரிவு செய்து பரிந்துரைத்திருந்தது. மிகவும் பெருமை மிக்க எய்ம்ஸ் மருத்துவத் திட்டத்தை மதுரை அருகேயுள்ள தோப்பூரை மத்திய அரசு தேர்வு செய்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைந்து பணிகள்: தமிழக அரசு பரிந்துரை செய்த ஐந்து இடங்களில் ஒன்றைத் தெரிவு செய்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கான திட்டப் பணிகளை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றமைக்காக தங்களுக்கு மிகுந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனை அமைப்பதற்கான பணிகளை விரைந்து தொடங்குவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும், ஆதரவுகளையும் மத்திய அரசுக்கு வழங்க வேண்டுமென தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர், முதன்மைச் செயலாளர் மற்றும் இதர மூத்த அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராபா எல்லையில் இஸ்ரேல் டாங்கிகள்: அதிகரிக்கும் போர்ப் பதற்றம்!

பொறியியல் விண்ணப்பப் பதிவுக்கு என்னென்ன விவரங்கள் தேவை?

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

SCROLL FOR NEXT