தமிழ்நாடு

நீதிபதிகளால் பேச முடியாது, தீா்ப்புகள் பேசப்பட வேண்டும்: இந்திரா பானா்ஜி

DNS

நாமக்கல்: தீர்ப்பு வழங்கிய பிறகு நீதிபதிகளால் பேச முடியாது, அவர்கள் வழங்கும் தீர்ப்புகள் பேசப்பட வேண்டும் என்றார் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி. 

நாமக்கல்லில் குடும்ப நல நீதிமன்றம், கூடுதல் சார்பு நீதிமன்றம், கூடுதல் மகளிர் நீதிமன்றங்கள் துவக்க விழா நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழா கலையரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. 

இந்த நீதிமன்றங்களை தொடங்கிவைத்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பேசியது: குடும்ப நீதிமன்றங்கள் தொடங்குவதன் நோக்கம் தம்பதியினர்களுக்குள் ஏற்படும் குடும்பப் பிரச்னைகளுக்கு சுமூகத்தீர்வு காண்பதே ஆகும். இப்போது விவகாரத்தும், மனமுறிவுகளும் அதிகரித்து வருகிறது. இதனை தவிர்க்க தம்பதியர்கள் தங்களது பிரச்னைகளை ஒருவருக்கொருவர் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை கொண்டிருக்க வேண்டும். கோபமான மனநிலையில் இருக்கும்போது எந்த ஒரு முடிவையும் எடுக்க முன்வரக்கூடாது. நீதிமன்றங்கள் பெரும்பாலும் குடும்பப் பிரச்னைகளை கையாளும்போது நல்லதொரு சுமூகத்தீர்வை வழங்க முன்வரவேண்டும். 

வழக்குரைஞர்கள் தனது மனுதாரருக்கு வாதாடுபவர்களாக மட்டும் இல்லாமல் ஆலோசகர்களாகவும், திருமண உறவை பாதுகாப்பவர்களாகவும் இருக்க வேண்டும். குடும்ப நல நீதிமன்றங்கள் வழக்குகள் மீது விரைந்து தீர்ப்பளிக்க வேண்டும். தீர்ப்பு மூலம் தான் பராமரிப்பு தொகையை பெற முடியும். காலதாமதம் என்பது ஏழை பெண்கள், குழந்தைகளுக்கு வாழ்வாதரத்தில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும். வழக்கு தாக்கல் செய்யும் மனுதாரர்களைச் சார்ந்தே நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் இயங்க வேண்டியுள்ளது. 

எனவே உயர் நீதிமன்றம் என்றாலும் சரி, மாவட்ட நீதிமன்றம் என்றாலும் சரி, மனுதாரர்களிடம் கனிவுடன் செயல்பட வேண்டும். சேவை மனப்பான்மையுடன் பணியை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் வழக்குகளை விரைந்து முடித்துக் கொடுக்க வேண்டும். காலம் கடத்தினால், அடுத்தமுறை மக்கள் நம்மிடம் வரமாட்டார்கள். காலம் கடந்த நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமமானது என்பதை உணர்ந்து வழக்குகளை விரைந்து முடித்தால் மட்டுமே மனுதாரர்களின் நம்பிக்கையைப் பெற முடியும். நீதி வழங்கப்படுவதற்கு நீதிபதிகள் மட்டும் காரணமாக இருப்பதில்லை. வழக்குரைஞர்களுக்கும் முக்கிய பங்கு உள்ளது. எனவே மிகச்சிறந்த தீர்ப்புகள் வெளிவர வழக்குரைஞர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். 

நீதிபதியாக அமர்ந்துவிட்டாலே யாருக்கும் ஆதரவாகவோ, சாதகமாகவோ செயல்படக்கூடாது. தீர்ப்புகள் தான் நீதிபதிகளை எடைபோடும். நீதிபதிகள் அளிக்கும் தீர்ப்புகளை பார்க்கும்போது நீதி வழங்கப்பட்டுள்ளது என்பது முழுமையாக தெரியவேண்டும். தீர்ப்புகள் தரத்துடனும், நுட்பமானதாகவும், தெளிவானதாகவும் இருக்க வேண்டும். தீர்ப்பு வழங்கிய பிறகு நீதிபதிகளால் பேச முடியாது, அவர்கள் வழங்கும் தீர்ப்புகள் பேசப்பட வேண்டும். நான் தொலைக்காட்சி பார்ப்பதில்லை எடுத்துக்கொள்ள வேண்டிய வழக்கு குறித்த விவாதங்கள் இரவு 12 மணிக்கு பிறகும் நீடிக்கும் நிலையில் அதற்கான நேரம் இல்லை. ஆனால் தீர்ப்புகள், நீதிபதிகள் மீதான விமர்சனங்களை கேள்விப்பட்டிருக்கிறேன். தீர்ப்பு குறித்த விமர்சனங்களுக்கு சில காட்சி ஊடகங்கள் முக்கியத்துவம் அளிப்பதற்கு காரணம், அவர்களுடைய வியாபார எண்ணமாகதான் இருக்க முடியும். 

ஒரு தீர்ப்பின் அடிப்படையில் வரும் விமர்சனங்களை தாங்கக்கூடிய மனநிலையில் நீதிபதிகள் இருக்கவேண்டும். இந்த விமர்சனங்களை கண்டு உணர்ச்சிவசப்படாமல் நீதிமன்றத்தின் மாண்புகளை பாதுகாக்கும் வகையில் சட்டத்தின்படியும், மனசாட்சிப்படியும் தீர்ப்பளிக்க வேண்டும். வழக்கு விசாரணை 3ஆவது நீதிபதிக்கு அனுப்பபடுவதிலிருந்தே, நீதிமன்றம் எந்த அளவுக்கு சுதந்திரமாக செயல்படுகிறது என்பதை அறிந்துகொள்ளலாம். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்று தமிழகம் வருவதற்கு முன்னர் கூட ஆண்டுக்கு ஒரு முறையாவது தமிழகம் வந்துவிடுவேன். கலாச்சாரம், பண்பாடு, வரலாறு உள்ளிட்டவற்றால் தமிழ்நாடு என்னை ஈர்த்துள்ளது. கடந்த ஓராண்டு கால பணி எனக்கு மகிழ்ச்சியானதாகவே இருக்கிறது. தொடர்ந்து இங்கேயே பணியாற்ற வேண்டும் என்று விரும்புகிறேன் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையால் மக்கள் அவதி

மரக்கடை உரிமையாளா் தற்கொலை

பெண் தற்கொலை: தம்பதியா் மீது வழக்கு

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT