4 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே 4 குழந்தைகளுக்கு விஷம் கலந்த உணவைக் கொடுத்து, தாயும் தற்கொலைக்கு முயன்றார்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே 4 குழந்தைகளுக்கு விஷம் கலந்த உணவைக் கொடுத்து, தாயும் தற்கொலைக்கு முயன்றார்.
பண்ருட்டி ஒன்றியம், காட்டுக்கூடலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கனகராஜ் (35). கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி செல்வராணி( 28). இவர்களுக்கு நிதிஷ்குமார் (8), நிஷாந்த் (7) மற்றும் ஸ்ரீமதி, ஸ்ரீநிதி (3) (இரட்டையர்) என 4 குழந்தைகள் உள்ளனர்.
கனகராஜ் மது அருந்திவிட்டு போதையில் வீட்டுக்கு வந்து அடிக்கடி தகராறு செய்வாராம். கடந்த சில வாரங்களாக அவர் சரிவர வேலைக்குச் செல்லவில்லையாம். இதனால், வீட்டுச் செலவுக்கு பணமின்றி செல்வராணி சிரமப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், புதன்கிழமை இரவு மீண்டும் மதுபோதையில் வீட்டுக்கு வந்த கனகராஜுக்கும், செல்வராணிக்கும் தகராறு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் கனகராஜ் தூங்கிவிட்டார். பின்னர் செல்வராணி, உணவில் விஷம் கலந்து தனது 4 குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டு தானும் சாப்பிட்டுள்ளார். இரவு நேரத்தில் கனகராஜின் வீட்டில் விளக்கு எரிவதையும், கதவு திறந்து கிடந்ததையும் கவனித்த அந்தப் பகுதி மக்களில் சிலர், வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, செல்வராணி, அவரது 4 குழந்தைகள் சுய நினைவின்றி மயங்கிக் கிடந்ததைக் கண்டனர். இதையடுத்து, அவசர ஊர்திக்கு தகவல் அளித்து வரவழைத்து 5 பேரையும் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு 5 பேரும் கடலூர் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் குறித்து முத்தாண்டிக்குப்பம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.