தமிழ்நாடு

பி.எஸ்.என்.எல். முறைகேடு வழக்கு: மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேர் விடுவிப்பு

DIN

பி.எஸ்.என்.எல். இணைப்புகளை முறைகேடாக சன் டிவிக்குப் பயன்படுத்தி அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கிலிருந்து மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரை விடுவித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதிமாறன் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, சன் டிவிக்கு பி.எஸ்.என்.எல். அதிவேக தொலைபேசி இணைப்புகளைப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தச் சட்ட விரோத தொலைபேசி இணைப்புகள் மூலம் அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுத்தியதாக தயாநிதி மாறன் மற்றும் கலாநிதி மாறன் ஆகியோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
இம்மோசடி தொடர்பாக மாறன் சகோதரர்கள் மற்றும் பி.எஸ்.என்.எல். பொது மேலாளராகப் பதவி வகித்த கே.பிரம்மநாதன், அந் நிறுவனத்தின் முன்னாள் துணைப் பொது மேலாளர் வேலுச்சாமி, தயாநிதிமாறனின் தனிச் செயலாளரான கெளதமன், சன் டிவி ஊழியர்களான கண்ணன், ரவி ஆகிய 7 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கின் விசாரணை சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த 2016-இல், இந்த வழக்கில் தில்லி சிபிஐ போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேருக்கும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது. இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேர் சார்பில் கடந்த அக்டோபர் மாதம் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
குற்றச்சாட்டை நிரூபிக்காததால்...இந்த வழக்கில் சிபிஐ நீதிமன்ற நீதிபதி நடராஜன் புதன்கிழமை தீர்ப்பு வழங்கினார். அத்தீர்ப்பில், பி.எஸ்.என்.எல். இணைப்புகளை மோசடி செய்யும் உள்நோக்கத்துடன் தயாநிதி மாறன் பெற்றதற்கான குற்றச்சாட்டை சிபிஐ நிரூபிக்கவில்லை. சன்குழுமத்தின் தலைவர் என்ற காரணத்துக்காக கலாநிதி மாறன் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரமில்லை. சன் குழுமத்தை இந்த வழக்கில் எதிர்மனுதாரராகச் சேர்க்காத நிலையில் அந்த நிறுவனத்தின் ஊழியர்களை இந்த வழக்கில் சேர்த்திருப்பது ஏற்புடையதல்ல.
பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுக்கும் ஆதாரமில்லை. இந்த வழக்கின் சான்று ஆவணங்கள் சிடி வடிவில் உள்ளதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்த சிடியை கடைசி வரை நீதிமன்றத்தில் 
சிபிஐ தாக்கல் செய்யவில்லை. வழக்கில் சிபிஐ தனது குற்றச்சாட்டை சரிவர நிரூபிக்கத் தவறி விட்டதால், இந்த வழக்கில் இருந்து அனைவரும் விடுவிக்கப்படுகின்றனர் எனத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் தொண்டை வலி, இருமலுடன் காய்ச்சல்: சீசன் நோயாக மாறியதா கரோனா?

பாலியல் புகாரில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை: எச்டி குமாரசாமி உறுதி

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

மரத்தில் கார் மோதி விபத்து: தாயுடன் மகன் பலி

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

SCROLL FOR NEXT