தமிழ்நாடு

விபத்து சிகிச்சை: ரூ.190 கோடியில் 72 மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படும்- அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

DIN

விபத்து மற்றும் அவசர சிகிச்சைகளை மேற்கொள்ளும் வகையில் தமிழகத்தில் 72 மருத்துவமனைகள் ரூ.190 கோடியில் படிப்படியாகத் தரம் உயர்த்தப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.
இந்திய - ஆஸ்திரேலியா இடையிலான விபத்து காய சிகிச்சை தொழில்நுட்பத்தின் அறிவுத்திறன் பரிமாற்ற நிகழ்ச்சி தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை சிறப்புத் திட்டத்தின் (தாய் திட்டம்) சார்பில் சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியது: தமிழக சுகாதாரத் துறையின் சார்பில் தாய் திட்டம் கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புது தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் ஆஸ்திரேலியா விக்டோரியா மருத்துவமனையின் விபத்து சிகிச்சைப் பிரிவுகளின் நடைமுறைகளைப் பின்பற்றி இத் திட்டம் செயல்பட்டு வருகிறது. 
5 அரசு மருத்துவமனைகளில்...முதல் கட்டமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, தாம்பரம் அரசு மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கடலூர் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனை மற்றும் பெரம்பலூர் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனை ஆகிய 5 மருத்துவமனைகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அடுத்த கட்டமாக, தமிழகத்தில் ஏற்கனவே கண்டறியப்பட்ட 72 மருத்துவமனைகளைத் தரம் உயர்த்தி இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத் திட்டம் செயல்படுத்தப்படும் அனைத்து மருத்துவமனைகளிலும் ஒரே மாதிரியான சிகிச்சை முறைகள் மற்றும் உபகரணங்கள், பயிற்சி, உட்கட்டமைப்பு வசதிகள் செய்து தர மொத்தம் ரூ.190 கோடி செலவில் திட்டம் வகுக்கப்பட்டு படிப்படியாக செயல்படுத்தப்படும். 
மாமல்லபுரத்தில்...விபத்து ஏற்பட்ட 60 நிமிஷங்களுக்குள் சிகிச்சை அளிக்கும் அவசர சிகிச்சை மையம் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் ஈஞ்சம்பாக்கத்தில் செயல்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, மாமல்லபுரத்தில் அவசர சிகிச்சை மையம் மிக விரைவில் ஏற்படுத்தப்பட உள்ளது என்றார் அவர். 
ஆஸ்திரேலியாவில் செயல்படுத்தப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சை செயல்பாடுகளை தமிழகத்தில் சிறப்பாகச் செயல்படுத்தியதற்கான பாராட்டு கேடயத்தை சுகாதாரத் துறை அமைச்சரிடம் ஆஸ்திரேலியாவின் வர்த்தக அமைச்சர் லியோனி முல்டன் வழங்கினார். 
சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், விபத்து மற்றும் அவசர சிகிச்சை ஆணையர் டாக்டர் தாரேஸ் அகமது உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT