போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் பராமரிப்புப் பணிக்காக மூடப்படும் ஸ்டெர்லைட் ஆலை
தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், பராமரிப்புப் பணிக்காக ஸ்டெர்லைட் ஆலை 15 நாட்களுக்கு மூடப்படுவதாக ஆலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், பராமரிப்புப் பணிக்காக ஸ்டெர்லைட் ஆலை 15 நாட்களுக்கு மூடப்படுவதாக ஆலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, ஏராளமான கிராம மக்கள் ஒன்று திரண்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கண் எரிச்சல், மூச்சுத் திணறல் உட்பட பல்வேறு உடல் நலப் பிரச்னைகள் ஏற்படுவதாலும், சுற்றுச்சூழல் மாசுபடுவதாலும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், அரசியல் கட்சியினரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.
Advertisement
இந்த நிலையில், பராமரிப்புப் பணிக்காக ஸ்டெர்லைட் ஆலை 15 நாட்கள் மூடப்படும் என்று ஆலை நிர்வாகம் அறிவித்திருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
ஸ்டெர்லைட் ஆலையில் இன்று முதல் அடுத்த 15 நாட்களுக்கு தாமிரம் உற்பத்தி செய்யப்படாது என்றும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
போராட்டத்தின் பின்னணி:
ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும், ஆலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆலை அருகேயுள்ள அ.குமரெட்டியாபுரம் பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
45ஆவது நாளான புதன்கிழமை, குமரெட்டியாபுரம் பகுதி பெண்கள் 50-க்கும் மேற்பட்டோர் தாங்கள் போராட்டம் நடத்திவரும் பகுதியில், தரையில் முட்டிப்போட்டு, முழக்கமிட்டனர். இந்த நூதனப் போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கல்லூரி மாணவர்கள்: தூத்துக்குடி, வ.உ.சிதம்பரனார் கல்லூரி மாணவர்கள் 3ஆவது நாளாக புதன்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து, கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கன்வாடிக்கு பூட்டு: தூத்துக்குடி அருகேயுள்ள அத்திமரப்பட்டியில் ஸ்டெர்லைட் நிறுவனத்தால் நடத்தப்படும் அங்கன்வாடிப் பள்ளிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்கள் குழந்தைகளை அரசு குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்துக் கொள்வதாகக் கூறி பெற்றோர் அழைத்துச் சென்றனர். இதையடுத்து, விவசாயிகளும் பொதுமக்களும் கதவை மூடி பூட்டுப்போட்டுச் சென்றனர்.
கையெழுத்து இயக்கம்: தூத்துக்குடியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கையெழுத்திட்டனர். இதையடுத்து, கையெழுத்துகள் அடங்கிய மனுவை மாவட்டச் செயலர் ஹென்றி தாமஸ், முன்னாள் மேயர் ஏபிஆர் அந்தோணி கிரேஸ் உள்ளிட்டோர் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
சார் ஆட்சியர் ஆய்வு: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடைபெறும் அ.குமரெட்டியாபுரத்திலும், அருகேயுள்ள தெற்கு வீரபாண்டியபுரம், குமாரகிரி பகுதிகளிலும் தூத்துக்குடி சார்ஆட்சியர் பிரசாந்த் தலைமையில், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர்கள் புதன்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். குடிநீர், காற்று ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாசு குறித்து இந்த 3 கிராமங்களில் ஆய்வு செய்த அதிகாரிகள், ஆய்வுக்காக குடிநீர் மாதிரிகளை சேகரித்தனர். ஆய்வின்போது, அப்பகுதி மக்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து சார் ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து சார் ஆட்சியர் கூறும்போது, மாதந்தோறும் நடத்தப்படும் வழக்கமான ஆய்வுதான் என்றும், இப்போது நடத்தப்பட்டுள்ள ஆய்வு குறித்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.