தமிழ்நாடு

தமிழில் யதார்த்த திரைப்படங்கள் அதிகளவில் உருவாக வேண்டும்: தேசிய திரைப்பட விருது தேர்வுக் குழு உறுப்பினர்கள்

DIN

யதார்த்த திரைப்படங்களும், ஆழமான ஆய்வு நோக்கிலான திரைப்படப் புத்தகங்களும் தமிழில் அதிகளவில் உருவாக வேண்டும் என 65-ஆவது தேசிய விருதுகளுக்கான தேர்வுக் குழுவில் அங்கம் வகித்த ஜி.தனஞ்செயன், ரவிசுப்பிரமணியன் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 
65- ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா தில்லி விஞ்ஞான் பவனில் வியாழக்கிழமை நடைபெற்றது. சிறந்த திரைப்படங்களுக்கான விருதுகளை தென் மாநிலப் பிரிவில் தேர்ந்தெடுக்கும் குழுவில் ஜி.தனஞ்செயன் உறுப்பினராக இடம்பெற்றிருந்தார்.
அதேபோல, சிறந்த சினிமா புத்தகத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான விருதுத் தேர்வுக் குழுவில் எழுத்தாளர் ரவி. சுப்பிரமணியன் உறுப்பினராக அங்கம் வகித்திருந்தார்.
இந்நிலையில், திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க தில்லி வந்திருந்த ஜி.தனஞ்செயன் 'தினமணி' நிருபருக்கு அளித்த பேட்டி:
தேசிய விருதுப் போட்டிக்கு மலையாளத்தில் இருந்து 66 படங்கள் அனுப்பப்பட்டன. ஆனால், தமிழில் இருந்து 32 படங்கள் மட்டுமே அனுப்பப்பட்டன. அந்த 32 படங்களில் 4 படங்கள் மட்டுமே தேசிய விருதுக்கு கவனம் பெறக் கூடிய யதார்த்தமான படங்களாக அமைந்தன. ஆனால், மலையாளத்தில் இருந்து விருதுக்கு வந்த படங்களில் பெரும்பாலானவை யதார்த்த சினிமாக்களாக இருந்தன. வெகுஜன சினிமாவுக்கு தேசிய விருது கிடைக்காது. யதார்த்தமான வாழ்வியல் சம்பந்தப்பட்ட படங்கள் வரும்போதே அவை தேசிய விருதுக்கான கவனத்தைப் பெறும்.
மேலும், தேசிய விருதுக்கு படங்களை அனுப்பும்போது எந்தப் பிரிவுக்கு அதை அனுப்புகிறோம் என்பதில் தமிழ் சினிமாத் துறை தெளிவாக இருப்பதில்லை. 
சிறந்த வெகுஜனப் படம், சிறந்த சண்டைப் பயிற்சி, சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் என மூன்று பிரிவுகளில் 'பாகுபலி'க்கு விருதுகள் கிடைத்தன. பாகுபலித் தயாரிப்பாளர்கள் மிகத் தெளிவாக எந்தெந்தத் துறைகளில் விருதுகள் கிடைக்கும் என்பதை முன்கூட்டியே சிந்தித்து அனுப்பினர். அதனால்தான் அப்படத்திற்கு மூன்று விருதுகள் சாத்தியமாகின. 
மேலும், தேசிய விருதுக்காகத் தமிழ்ப் படங்களை அனுப்பும்போது அவற்றுக்கு சரியாக 'சப்-டைட்டில்' எழுதாமல் அனுப்புகின்றனர். சரியான முறையில் சப் டைட்டில் எழுதப்பட்டாலே அதை பிற மொழி விருது தேர்வுக் குழுவினர் புரிந்து கொள்வர். இத்தவறுகளைத் திருத்திக் கொண்டால் தமிழுக்கு அதிக அளவில் விருதுகள் கிடைக்கும் என்றார் அவர். 
சிறந்த சினிமாப் புத்தகத்தை தேர்ந்தெடுப்பதற்கான விருதுத் தேர்வுக் குழுவில் அங்கம் வகித்த எழுத்தாளர் ரவிசுப்பிரமணியன் கூறியதாவது: 
தமிழில் சினிமா தொடர்பான விரிவான ஆய்வுப் புத்தகங்கள் மிகக் குறைவாகவே எழுதப்படுகின்றன. ஆனால், மலையாளம், வங்காளம் போன்ற மொழிகளில் சினிமா தொடர்பாக மிக ஆழமான ஆய்வுப் புத்தகங்கள் வெளியாகின்றன. தமிழில் வந்த புத்தகங்கள் மிக மேலோட்டமாக, வெறும் சம்பவத் திரட்டுகளாகவே இருந்தன. இதனால், அவை முதல் சுற்றிலேயே தட்டிக்கழிக்கப்பட்டன. 
பிற மொழிகளில் வெளியாகிய சினிமா புத்தகங்களை வாசித்தபோது, ஒரு புத்தகத்துக்காக எவ்வளவு கடின உழைப்பை அவர்கள் அளித்திருந்தனர் என ஆச்சரியப்பட வைத்தது.
மணிப்பூரின் முதல் சினிமா தொடர்பாக ஆய்வு நோக்கில் எழுதப்பட்ட 'மத்மகி மணிப்பூர்' என்ற புத்தகம் சிறந்த புத்தகத்துக்கான விருதை வென்றது. தமிழில் மிக அரிதாக, மிக ஆழமான, ஆய்வு நோக்கிலான சினிமாப் புத்தகங்கள் வெளிவருகின்றன. உதாரணமாக, எழுத்தாளர் அஜயன் பாலா, தியோடர் பாஸ்கரன் ஆகிய எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களைக் குறிப்பிடலாம். ஆனால், அந்தப் புத்தகங்கள் தேசிய விருதுக்கு அனுப்பப்படவில்லை என்பது துரதிருஷ்டவசமானது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிக்கு வேளாண்மை கல்லூரி மாணவா்கள் செயல்விளக்கம்

ஆலங்குளம் அருகே மொபெட் - டிராக்டா் மோதல்: தொழிலாளி பலி

சங்கரன்கோவிலில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

குற்றாலத்தில் சிலம்பாட்ட வல்லுநா்களுக்கு நடுவா் புத்தாக்க பயிற்சி முகாம்

கடையநல்லூா்: குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்

SCROLL FOR NEXT