தமிழ்நாடு

முடிவுக்கு வருகிறது 22 ஆண்டுகால போராட்டம்: ஸ்டெர்லைட் ஆலை திறப்பு முதல் சீல் வைப்பு வரை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படுவதாக திங்கள்கிழமை அரசாணை வெளியிடப்பட்ட நிலையில், 22 ஆண்டுகால போராட்டம் முடிவுக்கு வருகிறது.

தி. இன்பராஜ்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படுவதாக திங்கள்கிழமை அரசாணை வெளியிடப்பட்ட நிலையில், 22 ஆண்டுகால போராட்டம் முடிவுக்கு வருகிறது.

லண்டனை தலைமையிடமாகக் கொண்ட வேதாந்தா ரிசோர்ஸ் நிறுவனத்தின் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை, தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் அமைக்க கடந்த 1994-ஆம் ஆண்டு அக். 30-ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. ஆலை அமைக்க உள்ளூர் மக்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில், அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதா 18.3.1996 அன்று தூத்துக்குடி வந்தபோது கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, 1996-ஆம் ஆண்டு திமுக ஆட்சி வந்த நிலையில், சில மாதங்களில் ஆலை செயல்படத் தொடங்கியது.

அடுத்த கட்ட நடவடிக்கையாக ஆஸ்திரேலியாவில் இருந்து தாமிரத்தாது ஏற்றிக் கொண்டு தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்த எம்.வி.ரீசா என்ற கப்பல் 20.3.1996 அன்று நடுக்கடலில் தடுக்கப்பட்டு மீனவர்களால் திரும்ப அனுப்பப்பட்டது.

தொடர்ந்து, 10.4.1996 முதல் இரு பெண்கள் உள்ளிட்ட 16 பேர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். இதையடுத்து 18.4.1996 முதல் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் கழிவுகள் குழாய்கள் மூலம் கடலில் கலக்கப்படாது என்று அரசு சார்பில் உறுதியளிக்கப்பட்டது.

விதிமுறைகளை மீறி இயங்குவதாகக் கூறி ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் 7.11.1996-இல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. 5.7.1997 அன்று ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்ட வாயுக் கசிவு காரணமாக அருகேயுள்ள தனியார் உலர் பூக்கள் தயார் செய்யும் நிறுவனத்தில் பணிபுரிந்த 165 பெண் தொழிலாளர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

2.3.1999 அன்று அகில இந்திய வானொலி நிலையப் பணியாளர்கள் 11 பேர், ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியான நச்சு வாயுவால் மயங்கி விழுந்தனர். தொடர்ந்து, நாகபுரியில் செயல்படும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிலைய (நீரி) அதிகாரிகள் ஆய்வு செய்து தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் 23.11.1998 அன்று ஆலையை மூடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும், 25.12.1998 அன்று ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதிக்கப்பட்ட விதிப்படி ஆண்டுக்கு 1 லட்சத்து 36,850 டன் தாமிரம் மட்டுமே உற்பத்தி என்ற நிலை இருந்தது. ஆனால், 2003 டிசம்பரில் ஆண்டுக்கு 1 லட்சத்து 80,000 டன் உற்பத்தி செய்வதாக அந்த நிறுவனம் மூலமே தெரியவந்ததால் மீண்டும் எதிர்ப்பு கிளம்பியது.

21.9.2004 இல் முனைவர் தியாகராஜன் தலைமையிலான உச்ச நீதிமன்ற ஆய்வுக் குழு ஸ்டெர்லைட் தொழிற்சாலையை ஆய்வு செய்தபோது அனைத்து விதிகளும் மீறப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆலையின் விரிவாக்கப் பணிகளுக்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் இசைவு அளிக்கக் கூடாது என்றும், முன்னரே இசைவு அளித்திருப்பின் அதை திரும்பப் பெறுமாறும் உச்ச நீதிமன்றத்தின் குழு அறிவுறுத்திய நிலையில், 22.9.2004 அன்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் விரிவாக்கத்திற்கு அனுமதி கொடுத்தது.

தொடர்ந்து ஸ்டெர்லைட்டில் அனுமதியின்றி கட்டப்பட்ட கந்தக அமிலப் பிரிவு தனது உற்பத்தியை 2005-இல் தொடங்கியது. ஸ்டெர்லைட் ஆலையில் வரி ஏய்ப்பு நடந்திருப்பதாகப் புகார் எழுந்த நிலையில், கடந்த 24.7.2010 அன்று ஸ்டெர்லைட் நிறுவனத்தின் துணைத் தலைவர் வரதராஜன் ரூ. 750 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையே, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழுவினர் 26.7.2010 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இழுத்து மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் 28.9.2010 அன்று ஆலையை மூடும்படி சென்னை உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.

அதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து பின்னர் ஆலை இயங்கி வந்த நிலையில், 2013 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி ஆலையில் இருந்து வெளியேறிய கந்தக டை ஆக்சைடு வாயு காற்று மண்டலத்தில் கலந்ததால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக மார்ச் 28 ஆம் தேதி தூத்துக்குடியில் கடையடைப்பு மற்றும் பேரணி நடைபெற்றது. தொடர்ந்து, மார்ச் 30 ஆம் தேதி ஆலையை மூடும்படி மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது.

ஏற்கெனவே, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில், ஏப்ரல் 2 ஆம் தேதி ரூ. 100 கோடி பாதுகாப்பு வைப்புத் தொகையுடன் ஆலையைத் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையில் ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், ஆலையின் அருகே மேலும் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும் வகையில் தொழிற்சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டன.

விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆலையின் அருகேயுள்ள அ. குமரெட்டியாபுரம் பகுதி மக்கள் தங்களது போராட்டத்தை தொடங்கினர். கடந்த பிப். 12-ஆம் தேதி தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே தர்னா போராட்டம் நடத்திய அவர்கள், அன்று இரவு எம்ஜிஆர் பூங்கா முன்பு அமர்ந்து விடிய விடியப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்களை போலீஸார் கைது செய்தனர். போராட்டக் குழுவை சேர்ந்த நிர்வாகிகள் மகேஷ், பேராசிரியை பாத்திமாபாபு, விமல் ராஜேஷ், வேல்ராஜ், அல்பர்ட் சாமுவேல், துரைப்பாண்டியன், முருகன் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு சில நாள்களில் பிணையில் வெளியே வந்தனர்.

இந்நிலையில், பிப்.13 ஆம் தேதி முதல் அ.குமரெட்டியாபுரம் பகுதி மக்கள் தங்கள் ஊரில் உள்ள மரத்தடியில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர். கிராம மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஏப்.24 ஆம் தேதி தூத்துக்குடியில் கடையடைப்பு நடைபெற்ற நிலையில், அன்று இரவு நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு பொதுக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர்.

ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள அ. குமரெட்டியாபுரம், பண்டாரம்பட்டி, வடக்கு சங்கரப்பேரி, தெற்கு வீரபாண்டியபுரம், மடத்தூர், மீளவிட்டான், சில்வர்புரம் உள்ளிட்ட 20 இடங்களில் போராட்டம் நடைபெற்றது.

ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கான உரிமம் மார்ச் 31 ஆம் தேதியுடன் நிறைவு பெற்ற நிலையில், தனது வருடாந்திர உரிமத்தைப் புதுப்பிப்பதற்காக தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் அளிக்கப்பட்ட விண்ணப்பம் கடந்த ஏப்.8 ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக அ. குமரெட்டியாபுரத்தில் போராட்டம் தொடங்கியதன் நூறாவது நாளை முன்னிட்டு மே 22-இல் ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. 20-ஆம் தேதி நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தையில் வீராங்கனை அமைப்பு நிர்வாகி பேராசிரியை பாத்திமாபாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டு 22-ஆம் தேதி கவன ஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதாக எழுதிக் கொடுத்ததால் அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. ஆனால், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பு இயக்கத்தினர், பேராசிரியை பாத்திமாபாபுவை நீக்கம் செய்தனர். அறிவித்தபடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என அறிவித்தனர்.

இதற்கிடையே, மே 22 ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றோர் மீது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக அறிவித்து அரசாணை வெளியிட்டால் மட்டுமே உயிரிழந்தோரின் சடலங்களைப் பெறுவதாக அவர்களது உறவினர்கள் அறிவித்தனர்.

இதன் தொடர்ச்சியாக, ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்ட மின்சாரமும், தண்ணீரும் துண்டிக்கப்பட்டது. மேலும், ஆலை நிரந்தரமாக மூடப்படும் என்றும் அரசு அறிவித்தது. இந்நிலையில், மக்கள் உணர்வுக்கு மதிப்பளித்து ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என அறிவித்து முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி திங்கள்கிழமை அரசாணை வெளியிட்டார். அரசாணை வெளியிடப்பட்ட சில மணி நேரத்தில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆலைக்கு சீல் வைத்தார்.

கடந்த 22 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டங்கள் தற்போது முடிவுக்கு வரும் சூழலை எட்டியுள்ளது.

ஸ்டெர்லைட் சட்டப் போராட்டம் - இதுவரை

1994 ஆகஸ்ட் 1
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்திடம் தடையில்லாச் சான்றிதழ் பெற்றது ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம்.
1995 ஜனவரி 16
மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகம் சில நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஒப்புதல் அளித்தது.
1995 மே 17
சில நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு அனுமதி. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்திடம் அனுமதி பெற வலியுறுத்தல்.
1995 மே 22
ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் அனுமதி. இதனை எதிர்த்து தூய்மையான சுற்றுச்சூழலுக்கான தேசிய அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு.
1997 ஜனவரி 1
ஸ்டெர்லைட் ஆலையில் தாமிர உற்பத்தி தொடக்கம். ஆலையின் செயல்பாடுகளை நிறுத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மனு.
2009
ஸ்டெர்லைட் நிறுவனம் இரண்டாவது தாமிர உருக்காலையை தொடங்க மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகம் அனுமதி.
2010 செப். 28
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
2010 அக்.1
உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் மனு. உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை.
2013 மார்ச் 23
ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து சல்பியூரிக் அமிலம் கசிவு. ஒருவர் மரணம், பலருக்கு கடுமையான மூச்சுத் திணறல். ஆலையை மூட மீண்டும் கோரிக்கை.
2013 ஏப்ரல் 2
ஸ்டெர்லைட்டை மூட வேண்டுமென்ற உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. அதே நேரத்தில் ஸ்டெர்லைட் ஆலை ரூ.100 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு. இத்தொகை மூலம் மரம் வளர்ப்பு உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்.
2018 பிப்ரவரி
ஸ்டெர்லைட் நிர்வாகம் ஆலையை விரிவாக்கம் செய்ய முயற்சித்ததை அடுத்து மீண்டும் எதிர்ப்பு வலுத்தது.
2018 மார்ச் 28
பொதுமக்களின் தொடர் போராட்டத்தால், பராமரிப்புக்காக ஸ்டெர்லைட் ஆலை 15 நாள்கள் மூடல்.
2018 மார்ச் 31
ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் அளித்த உரிமம் காலாவதியானது.
2018 ஏப். 25
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மனு.
2018 மே 22
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் 100-ஆவது நாள். போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் சாவு.
2018 மே 23
ஆலை விரிவாக்கப் பணிகளுக்கு உயர் நீதிமன்றம் தடை.
2018 மே 28
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக தமிழக அரசு அரசாணை வெளியீடு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT