கி.பி.15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பன்றிக் குத்திப்பட்டான் கல், சதிக்கல் கண்டெடுப்பு
திருப்பத்தூர் அருகே கி.பி.15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பன்றிக் குத்திப்பட்டான் கல் மற்றும் சதிக்கல் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
திருப்பத்தூர் அருகே கி.பி.15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பன்றிக் குத்திப்பட்டான் கல் மற்றும் சதிக்கல் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரிப் பேராசிரியர்கள் ஆ.பிரபு, சு.சிவசந்திரகுமார், லெமோரியா அமைப்பின் வேலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன், சமூக ஆர்வலர் முத்தமிழ் ஆகியோர் திருப்பத்தூர் அருகே உள்ள ஆதியூரில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, ஆதியூரின் தென்மேற்கு எல்லையில் கூத்தராயன் வட்டம் என்ற பகுதியில் போர் வீரர்களது உருவம் கொண்ட சதிக்கல் மற்றும் காட்டுப்பன்றி குத்திப்பட்டான் கல் ஆகியவற்றை கண்டறிந்தனர்.
இதுகுறித்து பேராசிரியர் ஆ.பிரபு கூறியதாவது:
வேலூர் மாவட்டத்தின் பழைமையான ஊர்களில் ஆதியூரும் ஒன்று. இவ்வூர் பழைய திருப்பத்தூர் என்றும், இங்கிருந்தே திருப்பத்தூர் தோன்றியதாகவும், இதனால்தான் இப்பகுதிக்கு ஆதியூர் என பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.
இவ்வூரில் கூத்தராயன் வட்டம் என்ற இடத்தில் கள ஆய்வு மேற்கொண்டபோது, திறந்த வெளியில் 2 கல் சிற்பங்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றில் போர் வீரர்களது உருவம் கொண்ட சதிக்கல் ஒன்றும், காட்டுப்பன்றி குத்திப்பட்டான் கல் ஒன்றும் இருந்தன.
சதிக்கல்: சதிக்கல்லில் குதிரை மீது ஒரு வீரனும், யானை மீது ஒரு வீரனும் அமர்ந்துள்ளனர். இவர்கள் இருவரும் அக்காலத்தைச் சேர்ந்த படை வீரர்களாகவோ அல்லது இப்பகுதியை ஆட்சி செய்த சிற்றரசர்களாகவோ இருக்கக்கூடும்.
குதிரை வீரனது வலது கரத்தில் குதிரையின் கடிவாளமும், இடதுகரத்தில் போர் வாள் ஏந்தியாவாறும் காணப்படுகிறது. யானை வீரனது வலது கரத்தில் யானையைக் கட்டுப்படுத்தும் அங்குசமும், இடது கரத்தில் போர் வாள் ஏந்தியவாறும் காணப்படுகிறது. இருவரது கழுத்து மற்றும் காதுகளில் ஆபரணங்கள் உள்ளன. யானையும், குதிரையும் விரைந்து பாய்ந்து செல்வது போல் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது, போர் நிகழ்வினை எடுத்துரைப்பதாக உள்ளது.
இவ்விரு வீரர்களும் இப்பகுதியில் நடந்த போரில் வீரமரணம் அடைந்தவர்களாவர். வீரர்களின் மனைவிகளும் கல்லில் இடம்பெற்றுள்ளனர். அவர்களின் கரங்களில் மதுக்குடுவை காணப்படுகிறது. வீரர்கள் வீரமரணம் அடைந்தவுடன் அவர்களோடு இவர்களும் மடிந்த செய்தியை இது காட்டுகிறது. 2 அடி உயரம், 1 அடி அகலம் மட்டுமே கொண்ட இக்கல்லில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு உருவமும் மிகச் சிறியதாகவும், மிக நேர்த்தியாகவும் செதுக்கப்பட்டுள்ளன. இந்த சதிக்கல்லானது தமிழர்களது நுண்கலைத் திறனுக்கான சான்றாக விளங்குகிறது.
பன்றிக்குத்திப்பட்டான் கல்: அக்காலத்தில் வேளாண் நிலங்களுக்குள் புகும் காட்டுப்பன்றிகள் விளை பொருள்களைச் சேதப்படுத்தி, பெரும் இழப்புகளை ஏற்படுத்தும். காட்டுப்பன்றிகள் உருவத்தில் பெரியதும், வலிமை நிறைந்த விலங்குமாகும். மனிதர்களையே கொல்லக்கூடிய ஆற்றல் கொண்டவை. இந்தப் பன்றிகளை கொன்று ஊரைப் பாதுகாத்து, தன் உயிரை நீத்த வீரர்களுக்கு நடுகல் எடுத்துப் போற்றும் வழக்கம் தமிழகத்தில் இருந்தது. அவ்வாறு எடுக்கப்படும் கல் பன்றிக் குத்திப்பட்டான் கல் என்று அழைக்கப்படும்.
ஆதியூரில் காணப்படும் இக்கல்லில் 2 வீரர்கள் ஒரு காட்டுப்பன்றியை தங்களது வேல்கம்பைக் கொண்டு குத்திக் கொல்வது போல் செதுக்கப்பட்டுள்ளது. வீரர்கள் இருவரும் சகோதரர்களாக இருக்கக்கூடும். இருவரும் பக்கவாட்டில் கொண்டையிட்டுள்ளனர். காதுகள் மற்றும் கழுத்தில் ஆபரணங்கள் அணிந்துள்ளனர். இடையில் சிறிய கத்தி வைத்துள்ளது.
இவ்வூரில் பெரும்பான்மையாக வாழும் ஆதிதிராவிடர் மக்கள் "கூத்தரப்பன்' என அழைத்து குலதெய்வங்களாக இவ்விரு சிற்பங்களையும் வழிபட்டு வருகின்றனர்.
இம்மக்களில் பலர் "கூத்தன்' என்ற பழைமையான பெயரைக் கொண்டவர்களாக உள்ளனர். இங்குள்ள சதிக்கல்லிலும், பன்றிக் குத்திப்பட்டான் கல்லிலும் காணப்படும் வீரர்கள் இம்மக்களது முன்னோர்களாவர். மேலும் "கூத்தர்' என அழைக்கப்படுவோர் சங்க இலக்கியங்களில் விவரிக்கப்படும் மிகப் பழைமையான இனக்குழு மக்களாவர்.
யானையை கட்டுப்படுத்தப் பயன்படுத்தும் அங்குசத்தையும், பழைமையான போர் வாளையும் இப்பகுதி மக்கள் இன்று வரை பாதுகாத்து வருகின்றனர். இவ்விரு பொருள்களும் இங்குள்ள சிற்பங்களின் வரலாற்று உண்மைத் தன்மையை விவரிப்பதாக உள்ளன.
இச்சிற்பங்களின் வடிவத்தைக் கொண்டு இவை கி.பி. 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்கக்கூடும். திருப்பத்தூர் வட்டார வரலாற்றில் இவ்விரு சிற்பங்களும் மிக முக்கியமான சான்றுகளாகத் திகழ்கின்றன.