தமிழ்நாடு

எண்ணூர் துறைமுகத்தில் மீண்டும் எண்ணெய்க் கசிவு: கடலோர காவல்படைக் கப்பல்கள் விரைவு (தினமணி எக்ஸ்க்ளூசிவ்) 

DIN

சென்னை: சென்னையை அடுத்துள்ள எண்ணூர் துறைமுகத்தில் மீண்டும் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டதை அடுத்து, கடலோரக் காவல்படைக் கப்பல்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.

சென்னை அருகே எண்ணூர் துறைமுகம் அமைந்துள்ளது. இங்கு சனிக்கிழமை இரவு திரவ எரிவாயு (எல்.பி.ஜி)  ஏற்றிக் கொண்டு, எம்.டி கோரல் ஸ்டார் என்ற கப்பல் வந்து சேர்ந்தது. அதனையடுத்து துறைமுக தளத்தில் நிறுத்தப்பட்ட அந்த கப்பலில் இருந்து எரிவாயுவை இறக்கும் பணி நடந்து வந்தது. 

இந்நிலையில் ஞாயிறு அதிகாலை 4 மணியளவில் கப்பலுக்கு அருகே எண்ணெய்ப் படலம் பரவி இருப்பதை ஊழியர்கள் கண்டறிந்தனர். உடனடியாக அவர்கள் சோதனை செய்த போது, கப்பலின் எஞ்சின் பகுதியில் இருந்து, எஞ்ஜினின் இயக்கத்திற்குத் தேவையான 'பர்னஸ் ஆயில்' கசிவு உண்டாகியிருப்பதைக் கண்டறிந்தனர்.  பின்னர் உடனடியாக துறைமுக  அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விரைந்து வந்த துறைமுக பாதுகாப்பபு அதிகாரிகள், கடலில் உருவாகியுள்ள எண்ணெய்ப் படலம் குறித்து ஆய்வு செய்தனர். 

இதனைத் தொடர்ந்து கப்பலில் ஏற்பட்டுள்ள எண்னெய்க் கசிவைத் தடுத்து நிறுத்தவும், கடலில் பரவியுள்ள எண்ணெய் படலம் மேற்கொண்டு பரவாமல் தடுத்து நிறுத்துவது குறித்தும் மற்றும் எண்ணெய்க் கழிவுகளை நீக்குவது குறித்தும் ஆலோசித்தனர். இதனைத் தொடர்ந்து கடலோர காவல்படையின் உதவி கோரப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சென்னை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கடலோர காவல்படைக்கு சொந்தமான இரண்டு ரோந்து கப்பல்கள் உடனடியாக எண்ணூருக்கு விரைந்தன. 

அதேசமயம் எண்ணூர் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டன. அதேசமயம் புதிய கப்பல்கள் எதுவும் உள்ளே நுழைய அனுமதிக்கப்படவில்லை. 

இந்நிலையில் எண்ணெய் கழிவுகளை நீக்குவதற்காக, கடலோர காவல்படைக்குச் சொந்தமான மாசுக் கட்டுப்பாட்டு சிறப்புக் கப்பலான     'சமுத்ரா பெஹ்ரேதார்'  விசாகப்பட்டிணத்தில் இருந்து சென்னைக்கு வர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஞாயிறு மாலை புறப்பட உள்ள அக்கப்பல், சுமார் 18 மணி நேர பயணத்திற்குப் பிறகு சென்னைக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

உடனடி நடவடிக்கையாக கடலில் பரவியுள்ள எண்ணெய் படலம் குறித்து ஆய்வு செய்யும் பணியில் கடலோர காவல்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 

கடந்த 2016-ஆம் ஆண்டு எண்ணூர் துறைமுகத்திற்கு அருகே இரண்டு கப்பல்கள் மோதிக் கொண்டதில் உருவான எண்ணெய்க் கசிவின் காரணமாக, வடசென்னை பெரும் பாதிப்புக்குளானது நினைவிருக்கலாம். இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள எண்ணெய்க் கசிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.       

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT