தமிழ்நாடு

நதிகளைப் பாதுகாப்பது நமது கடமை: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

DIN


நதிகளைப் பாதுகாப்பது நமது கடமை என்றார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.
திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தில் தாமிரவருணி புஷ்கர விழாவை வியாழக்கிழமை தொடங்கி வைத்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அங்குள்ள தாமிரவருணி நதியில் புனித நீராடி வழிபட்டார். பின்னர், மஹா புஷ்கரத்தை முன்னிட்டு அகில பாரதிய துறவியர் சங்கம் சார்பில் நடைபெற்ற அகில பாரதிய துறவியர் சங்க மாநாட்டைத் தொடங்கிவைத்து அவர் பேசியது:
144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கலாசாரம் மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க மஹா புஷ்கரம் நிகழ்ச்சியைத் தொடங்கி வைப்பதில் பெருமையடைகிறேன். தாமிரவருணி நதியானது தமிழ் மொழி, கலாசாரம் மற்றும் இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாற்றோடு இரண்டறக் கலந்ததாகும்.
மனித வரலாற்றில் ஆறு முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக, நமது கலாசாரத்தில், நதிகளை நீர் ஆதாரமாக மட்டுமல்லாமல், கடவுள்களாகப் போற்றி வழிபடுகின்றனர். கிழக்கு இந்தியாவில் கங்கை மற்றும் யமுனை, மேற்கு இந்தியாவில் சிந்து மற்றும் சரஸ்வதி, வட இந்தியாவில் நர்மதா, கோதாவரி மற்றும் துங்காபத்ரா, தென்னிந்தியாவில் காவிரி மற்றும் தாமிரவருணி ஆகிய புனித நதிகளில் புஷ்கரம் நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது. நதிகளை வழிபடும் புஷ்கரம் நிகழ்ச்சியானது அனைத்து நாடுகளிலும் நதியைப் போற்றும் விதத்திலும், பாதுகாக்கும் விதத்திலும் நடைபெற வேண்டும்.
அகத்தியர் தொல்காப்பியருக்கு முந்தைய காலத்தவராவார். இதன் மூலம் தாமிரவருணியின் வயதை தமிழ் மொழியின் வயதாகக் கொள்ளலாம். தாமிரவருணி பொதிகை மலையில் கடல் மட்டத்திலிருந்து 1,725 மீட்டர் உயரத்தில் உற்பத்தியாகி, கல்யாணி தீர்த்தம், அகஸ்தியர் அருவி வழியாக புன்னக்காயலில் மன்னார் வளைகுடாவில் கலக்கிறது. தாமிரவருணியில் பல்வேறு அருவிகள் உற்பத்தியாகின்றன. தாமிரவருணி பாயும் மேற்குத் தொடர்ச்சி மலையில் பல்வேறு அரிய வகை மூலிகைகள் உள்ளன. இதன்மூலம் உலகம் முழுவதும் மேற்குத் தொடர்ச்சி மலை வனப் பகுதி கவருவதாக உள்ளது. இந்த நதி தென் தமிழகத்தின் 4,400 சதுர கிலோமீட்டர் பரப்பில் பாசன வசதியைத் தருகிறது. இது விவசாயத்திற்கு மட்டுமன்றி மின்சாரம் தயாரிப்பதற்கும் பயனுள்ளதாக உள்ளது.
புஷ்கரம் விழாவின் நோக்கம் நாம் நலமாக வாழ நதியை தூய்மையாக வைத்துக் கொள்வதுதான். இந்த நாளில் நதியை தூய்மையாக வைத்துக் கொள்வதன் மூலம் நமது கலாசாரம், பண்பாட்டை வருங்காலச் சந்ததியினருக்கு வழங்க வேண்டும் என்று உறுதியெடுத்துக் கொள்ள வேண்டும்.
இங்கு வந்தவுடன் புஷ்கரம் நிகழ்ச்சிக்கு தமிழக அரசு எந்த விதத்திலும் உதவவில்லை என்று கூறினார்கள். உடனடியாக தமிழக முதல்வரிடம் இதுகுறித்துப் பேசினேன். அவரும் உடனடியாக புஷ்கரம் விழாவுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய நடவடிக்கை எடுக்கிறேன் என்று உறுதியளித்துள்ளார் என்றார்.
முன்னதாக, தாமிரவருணி மஹா புஷ்கரம் மலரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட, சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் அகில பாரதிய துறவியர் சங்கச் செயலர் ராமானந்தா நோக்கவுரையாற்றினார். ஸ்ரீ பிரம்மானந்தா சுவாமிகள், அன்னை ஞானேஸ்வரி சமாஜ செயலர் வித்யாம்பா, விஸ்வ ஹிந்து பரிஷத் அகில உலகத் தலைவர் மற்றும் ஹிமாசலப் பிரதேச முன்னாள் ஆளுநர் விஷ்ணு சதாசிவ கோக்ஜே, சாரதா கல்வி நிறுவனத் தலைவர் ஆத்மானந்தா, ஜெயப்பிரகாஷ் சுவாமி, நாராயண ஜீயர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீமத் சடகோபன் ராமானுஜ ஜீயர், சாம்பவி வித்யாம்பா சரஸ்வதி, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.
மன்னார்குடி செண்ட அலங்கார செண்பக மன்னார் ஜீயர், சுவாமி சச்சிதானந்தா சபை சாது தாம்பூரானந்தா, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் மற்றும் பல்வேறு ஆதீனங்கள், ஜீயர்கள், சன்னியாசிகள், துறவிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
மேலும், கலைநிகழ்ச்சிகள், புத்தகங்கள், மற்றும் இசைத் தொகுப்பு வெளியீட்டு விழா உள்ளிட்டவை நடைபெற்றன. அகில பாரதிய துறவியர் சங்கத் தலைவர் சாந்தலிங்க மருதாசல அடிகள் வரவேற்றார். நெடுவயல் குமார் நன்றி கூறினார்.
சுவாமி வேதாந்தா ஆனந்தா, நாச்சி முத்துராஜா ஆகியோர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT