தமிழ்நாடு

மஹா புஷ்கரம் 7-ஆவது நாள் தாமிரவருணி கரைகளில் திரளான பெண்கள் வழிபாடு

DIN


தாமிரவருணி மஹா புஷ்கர விழாவையொட்டி, 7-ஆவது நாளாக புதன்கிழமை ஆயிரக்கணக்கான பெண்கள் நதிக்கரைகளில் நீராடி வழிபாடு நடத்தினர். 
ஆயுதபூஜை விடுமுறை என்பதால் வியாழக்கிழமை (அக். 18) முதல் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம்பெயர்ந்ததைத் தொடர்ந்து, தாமிரவருணி நதியில் மஹா புஷ்கர விழா கடந்த 11-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. பொதிகை மலை முதல் புன்னக்காயல் வரை மொத்தம் 143 தீர்த்தக்கட்டங்களில் பக்தர்கள் நீராடி வருகின்றனர். 
ஏழாவது நாளான புதன்கிழமையும் காலை முதல் பக்தர்கள் புனித நீராடினர். பெண்கள் தங்களது குடும்பத்தினர் நலம் பெறவும், மழைவளம் சிறக்கவும் நதிக்கரைகளில் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
பாபநாசம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, திருப்புடைமருதூர், முக்கூடல், கோடகநல்லூர், திருநெல்வேலி குறுக்குத்துறை, கைலாசபுரம், வண்ணார்பேட்டை, அருகன்குளம் (ஜடாயு தீர்த்தம்), சீவலப்பேரி, முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, தென்திருப்பேரை, ஏரல் உள்ளிட்ட தீர்த்தக் கட்டங்களில் அதிகாலை முதல் ஆயிரக்கணக்கானோர் நீராடினர். அவர்களுக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
திருநெல்வேலி சந்திப்பு அருகே கைலாசபுரத்தில் உள்ள அருள்மிகு கைலாசநாதர் கோயிலில் புதன்கிழமை சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தைப்பூச மண்டப படித்துறையில் திருப்பள்ளியெழுச்சி, மங்கள நாகசுர இசை, சங்கல்ப ஸ்நானம் ஆகியவை நடைபெற்றன. தாமிரவருணி மஹா புஷ்கர ஒருங்கிணைப்புக் குழு சார்பில், குறுக்குத்துறையில் புதன்கிழமை தன்வந்திரி ஹோமம் நடைபெற்றது. அதன்பிறகு, தேவார இன்னிசை மற்றும் வேதபாராயணம் நடைபெற்றன. மாலையில் செங்கோல் ஆதீனம் சிவப்பிரகாச தேசிக சத்திய ஞான பரமாச்சாரிய சுவாமிகளுக்கு புஷ்பாஞ்சலியும், மாயவரம் ஞானகுரு பாகவதரின் நாம சங்கீர்த்தனமும் நடைபெற்றன.
சீவலப்பேரியில் துர்காம்பிகா தேவஸ்தானம் சார்பில் நடைபெற்ற மஹா புஷ்கர விழாவில், புதன்கிழமை மஹா சண்டியாகம் நடைபெற்றது.
ராஜவல்லிபுரம், அருகன்குளம் ஜடாயு தீர்த்தக் கட்டங்களிலும் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி, நதியில் மலர்களைத் தூவியும், தீபங்களை விட்டும் வழிபட்டனர்.
சிருங்கேரி சாரதா மடம் மற்றும் ஹிந்து ஆலய பாதுகாப்புக் குழு சார்பில், கைலாசபுரத்தில் உள்ள சங்கீத சபாவில் தொடர்ந்து 7-ஆவது நாளாக 3 வேளையும் அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் உணவருந்தி முடித்ததும் தேவார, திருவாசகப் பாடல்களைப் பாடிச் சென்றனர். வண்ணார்பேட்டை, குறுக்குத்துறை உள்ளிட்ட பகுதிகளிலும் அன்னதானம் நடைபெற்றது.
பக்தர்கள் கோரிக்கை: ஆயுதபூஜை விடுமுறை காலங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருநெல்வேலிக்கு நீராட வருவார்கள். திருநெல்வேலி சந்திப்பில் இருந்து சி.என். கிராமம் வழியாக குறுக்குத்துறை செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. அதை உடனடியாக சீரமைக்க வேண்டும். அருகன்குளம் ஜடாயு தீர்த்தகட்டம் செல்லும் வழியிலும், பிற தீர்த்தகட்டங்களிலும் மின்விளக்கு வசதிகளை அதிகப்படுத்த வேண்டும். திருநெல்வேலி தைப்பூச மண்டப படித்துறை தீர்த்தக் கட்டத்தை, எதிரே கொக்கிரகுளம் பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் பார்த்து தரிசனம் செய்கின்றனர். அப்பகுதியில் கூடுதலாக மின்விளக்கு வசதிகள் செய்ய வேண்டும். சிறப்பு பேருந்துகளை அனைத்து தீர்த்தகட்டங்களுக்கும் இயக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்திலிருந்து கோழிகள் கொண்டு வரத் தடை

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

SCROLL FOR NEXT