முகப்பு
தமிழ்நாடு

தாமிரவருணி மஹா புஷ்கரம்: 12-ஆவது நாளாக ஏராளமானோர் புனித நீராடல்

தாமிரவருணி மஹா புஷ்கர விழாவின் 12-ஆவது நாளான திங்கள்கிழமையும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்

Updated On : 23 அக்டோபர், 2018 at 1:29 AM
திருநெல்வேலி தைப்பூச மண்டப படித்துறையில் திங்கள்கிழமை புனித நீராடிய பக்தர்கள்.
பகிர்:


தாமிரவருணி மஹா புஷ்கர விழாவின் 12-ஆவது நாளான திங்கள்கிழமையும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் படித்துறைகளில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்வதை வைத்தும், கிரங்களின் அமைப்புப் படியும் 144 ஆண்டுகளுக்கு பின்பு தாமிரவருணி நதியில் மஹா புஷ்கர விழா கடந்த 11ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 
கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் லட்சக்கணக்கான மக்கள் ஆற்றில் நீராடக் குவிந்த நிலையில், 12ஆவது நாளாக திங்கள்கிழமையும் ஏராளமானோர் புனித நீராடினர். 
அரசு அலுவலகங்கள், பள்ளிகளுக்கு வேலை நாள் என்பதால் தமிழக பக்தர்களின் கூட்டம் சற்று குறைவாக இருந்தது. உள்ளூர் மக்கள் அதிகாலையிலேயே நீராடிச் சென்றனர். ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், கேரள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பலர் தீர்த்தக்கட்டங்களில் நீராடினர்.
பாபநாசம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, திருப்புடைமருதூர், முக்கூடல், கோடகநல்லூர், திருநெல்வேலி குறுக்குத்துறை, கைலாசபுரம், வண்ணார்பேட்டை, அருகன்குளம் (ஜடாயுதீர்த்தம்), சீவலப்பேரி, முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, தென்திருப்பேரை, ஏரல் உள்ளிட்ட தீர்த்தக்கட்டங்களில் மட்டுமே கூட்டம் அதிகம் காணப்பட்டது. 
பிற பகுதிகளில் ஆயுதபூஜை விடுமுறை காலங்களை ஒப்பிடுகையில் கூட்டம் பாதியாக குறைந்தது. இருப்பினும் நவகைலாய கோயில்கள், நவதிருப்பதி கோயில்கள், குறுக்குத்துறை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில், அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோயில், பாபநாசம் பாபநாசநாதர் கோயில் ஆகியவற்றில் வெளியூர் பக்தர்கள் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த மழை காரணமாக திருநெல்வேலியில் தாமிரவருணியில் தண்ணீர் வரத்து அதிகமிருந்தது. ஹிந்து ஆலய பாதுகாப்புக் குழு, தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ருத்ர சத சண்டி யாகம்: திருநெல்வேலி சந்திப்பு அருகே கைலாசபுரத்தில் உள்ள அருள்மிகு கைலாசநாதர் கோயில் வளாகத்தில் மஹா சண்டி யாகம் நடைபெற்றது. தீர்த்தக்குட ஊர்வலம், மஹா தீபாராதனை நடைபெற்றது. தைப்பூச மண்டப படித்துறையில் காலையில் திருப்பள்ளியெழுச்சி, மங்கள நாகசுர இசை, சங்கல்ப ஸ்நானம், திருமுறை இன்னிசை ஆகியவை நடைபெற்றன. பின்னர் பாராயணமும், பூர்ணாஹுதியும் நடைபெற்றன. மாலையில் வேத கோஷத்துடன் மங்கள ஆரத்தி நடைபெற்றது.
சீவலப்பேரியில் உள்ள துர்காம்பிகா தேவஸ்தானம் சார்பில் ருத்ர ஹோமம் நடைபெற்றது. திருநெல்வேலி குறுக்குத்துறையில் ஆயுஷ்ய ஹோமம், மஹா தீபாராதனை, பூர்ணாஹுதி ஆகியவை நடைபெற்றன.

திருநெல்வேலி வண்ணார்பேட்டை படித்துறையில் திங்கள்கிழமை புனித நீராடிய பக்தர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.