பன்றிக் காய்ச்சலுக்கு இருவர் சாவு: கர்ப்பிணி உள்பட 9 பேருக்கு சிகிச்சை
மதுரையில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இரு பெண்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கர்ப்பிணி உள்பட 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும்,
மதுரையில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இரு பெண்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கர்ப்பிணி உள்பட 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் மேலும் 5 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் எஸ்.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர், செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை மேலும் கூறியது:
மதுரை அரசு மருத்துவமனையில் பல்வேறு வகை காய்ச்சல் பாதிப்புடன் 51 பெரியவர்கள், 23 குழந்தைகள், 24 கர்ப்பிணிகள் என மொத்தம் 99 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட, மதுரை பைக்காராவைச் சேர்ந்த மீனாட்சி (55), அனுப்பானடியைச் சேர்ந்த வீரம்மாள் (70), திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த கிருஷ்ணம்மாள் (65), மதுரை குலமங்கலம் பகுதியை சேர்ந்த சுசிலா (55), மதுரை மாவட்டம் அழகர்கோவில் அழகாபுரியை சேர்ந்த சாமிராஜ் (52), திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பொன்னம்மாள் (19) ஆகிய 6 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இவர்களில் மீனாட்சி, வீரம்மாள் ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டனர்.
இதர 4 பேருக்கும் தனி வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் 5 பேருக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி இருப்பதால் அவர்களுக்கும் சிறப்பு வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார் சண்முகசுந்தரம்.
பெண் சாவு: குமரி மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒரு வயது குழந்தை உள்பட 3 பேர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இவர்களில் நாகர்கோவில் சற்குணவீதியை சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியையான தெரேசா ஜோஸ்பின்ராணி சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
இதுகுறித்து குமரி மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் மதுசூதனன் கூறும்போது, தற்போது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒருவரும், தனியார் மருத்துவமனைகளில் 6 பேரும் என மொத்தம் 7 பேர் பன்றிக் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை என்றார் அவர்.
5 பேர் அனுமதி: சேலம் அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனித் தனி சிகிச்சைப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 3 பெண்களுக்கு, ப்ளூ காய்ச்சல் அறிகுறி இருக்கலாம் என்ற அடிப்படையில் அவர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருக்கலாம் என்ற அடிப்படையில் அவர்களின் ரத்த மாதிரிகளைச் சேகரித்து, சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதேபோல், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 பேரும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.