பேரூர் ஆதீனம் மறைவு: வைகோ இரங்கல்
பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் மறைவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.
பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் மறைவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட இரங்கல் செய்தி:
பேரூர் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் மறைவு தமிழ்கூறு நல்லுலகுக்கு மிகப்பெரிய இழப்பாகும். மக்களின் வறுமைக்கும், அறியாமைக்கும் கல்வியின்மை தான் காரணம் என்பதை உணர்ந்து தமிழ்க் கல்லூரியை மிகச் சிறப்பாகச் செயல்படுத்தினார்.
தவத்திரு சாந்தலிங்க அடிகளார் திருமடம், உலக சைவப் பேரவை, தமிழக துறவியர் பேரவை, தவத்திரு சாந்தலிங்க அடிகளார் நினைவு அறக்கட்டளை, தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கல்விக் குழு, லண்டன் திருக்கோயில் திருப்பணிக்கு குறள் நெறி பரப்பும் குழு, சேக்கிழார் ஆய்வு மையம், மலேசியா அருள்நெறித் திருக்கூட்டம், தென்னாப்பிரிக்க சிவமன்றம் ஆகியவற்றில் புரவலராக இருந்து பணியாற்றினார்.
சென்னை, மதுரை, கோவை பல்கலைக்கழகங்களில் கவ்விப் பணியில் பல்வேறு மாறுதல்களைக் கொண்டு வந்தார். சென்னைப் பல்கலைக்கழகம் இவருடைய இலக்கியப் பணியைப் பாராட்டி டாக்டர் (டி.லிட்) பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. இவருடைய சேவை தமிழ்கூறு நல்லுலகம் உள்ளவரை போற்றப்படும் என வைகோ தெரிவித்துள்ளார்.