கரூர்: பாஜகவுடன் கூட்டணி வைத்து தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்க திமுக முயற்சிக்கிறது என்று அதிமுக எம்.பியும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை குற்றம் சாட்டியுள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக கரூர் வந்திருந்த தம்பிதுரை எம்.பி அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக அரசைக் கலைப்பதற்கு என்று திமுக எத்தனையோ முயற்சிகளை எடுத்தது. ஸ்டாலின் சட்டையைக் கிழித்துக் கொண்டு பார்த்தார்; சட்டப்பேரவையில் சபாநாயகர் மீது மைக்கை பிடுங்கி வீசினார்கள். ஆனால் எதுவுமே நடக்கவில்லை. மக்கள் ஆதரவுடன் இந்த ஆட்சி தொடர்ந்து சிறப்பாக நடந்து வருகிறது
எனவே இப்போது பாஜக தலைமையிலான மத்திய அரசை தொடர்பு கொண்டு அதிமுக ஆட்சியை கவிழ்க்க திமுக திட்டம் தீட்டி வருகிறது. அதன் விளைவுதான் அமைச்சர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் வீடுகளில் சிபிஐ, வருமானவரி சோதனை என்பதெல்லாம். ஆனால் இது போன்ற அச்சுறுத்தல்களுக்கு அதிமுக அரசு பயப்படாது. ஆளுங்கட்சிக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என சோதனைகள் நடப்பது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.
திமுகவிற்கும் பாரதிய ஜனதாவிற்கும் ஒரு கூட்டணி உருவாகிக் கொண்டிருக்கிறது. தமிழக பாஜக தலைவர்கள் திமுகவுடன் கூட்டணி வைக்க முயற்சி செய்கின்றனர் ஸ்டாலினுக்கு மறைமுகமாக பாஜக உதவி செய்து கொண்டிருக்கிறது. உண்மையான கூட்டணியே அவர்களுக்கு இடையேதான் இருக்கிறது.
இவ்வாறு தம்பிதுரை எம்.பி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.