தமிழ்நாடு

அரசுக்கும் மக்களுக்கும் பாலமாகச் செயல்படுங்கள்: ஊடகங்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்

DIN


அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக ஊடகங்கள் செயல்பட வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.
நியூஸ் ஜெ' தொலைக்காட்சியின் இணையதளம், இலச்சினை மற்றும் செயலி ஆகியவற்றை அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் சென்னையில் புதன்கிழமை தொடங்கி வைத்தனர். முன்னதாக இந்த நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி நிகழ்த்திய உரை:-
தமிழகத்தில் பல்வேறு தொலைக்காட்சிகள் இருந்தாலும் தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் முழுமையாக மக்களுக்குக் கொண்டு செல்லப்படுவது கிடையாது. எல்லா கட்சிகளும் தொலைக்காட்சிகளை நடத்துகின்றன. மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்த போது கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகளின் துணையோடு தொலைக்காட்சியை உருவாக்கினார்.
ஆனால், இன்றைய தினம் அந்தத் தொலைக்காட்சி யாரிடம் செல்லக்கூடாது என்று நினைத்தோமோ அவர்களிடம் சென்று விட்டது. அதற்கு மாறாகத்தான் நியூஸ் ஜெ' தொலைக்காட்சியை உருவாக்கியுள்ளனர்.
நாட்டில் நடைபெறும் சம்பவங்களை மக்களுக்கு உடனடியாகத் தெரிவிப்பது தொலைக்காட்சிகள்தான்.
அரசின் நல்ல திட்டங்களை உடனுக்குடன் தெரிவிக்க வேண்டுமெனால் நமது கட்சிக்கும் ஒரு தொலைக்காட்சி வேண்டுமே என்ற குறையை நியூஸ் ஜெ போக்கியிருக்கிறது.
பாலமாகச் செயல்படுங்கள்: பல்வேறு தொலைக்காட்சிகள் தமிழகத்தில் இருந்தாலும், அரசின் திட்டங்களை ஒருமுறைதான் காண்பிப்பார்கள். ஆனால், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சிறு பிரச்னையைச் சொன்னாலோ நாள் முழுவதும் மாற்றிக் மாற்றி காட்டிக் கொண்டே இருப்பர். நாம் எவ்வளவுதான் கஷ்டப்பட்டு உழைத்தாலும், மக்களுக்கு நன்மை செய்தாலும் அதனை மக்களுக்குக் கொண்டு செல்வது கடினம். தொலைக்காட்சிகளிடம் கேட்டால் விறுவிறுப்பான செய்திகள் வேண்டும் எனக் கேட்பார்கள்.
விறுவிறுப்பான செய்திகள்: ஆளும் கட்சியில் இருந்து கொண்டு எப்படி விறுவிறுப்பான செய்திகளைத் தர முடியும். மக்களுக்கு நன்மை பயக்கும் செய்திகளைத்தான் சொல்ல முடியும். அதனைத்தான் தர முடியும். தமிழக அரசு பல்வேறு துறைகளில் தொடர்ந்து சாதனைகளை படைத்து வருகிறது. வேளாண்மை, சுகாதாரம், உள்ளாட்சி, உயர்கல்வி உள்ளிட்ட துறைகளில் தேசிய அளவில் பரிசுகளைப் பெற்றுள்ளது தமிழக அரசு. ஆனால், இந்தச் செய்திகளை குறிப்பிட்ட அளவு மட்டுமே தொலைக்காட்சிகளில் காட்டுகிறார்கள்.
பல ஆண்டுகளாக நடந்து வந்த காவிரி பிரச்னையில் நாம்தான் தீர்ப்பைப் பெற்றுள்ளோம். நல்ல திட்டங்கள் இன்றைக்கு அரசு மூலமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அரசின் சாதனைகள் மூலமாக கிடைக்கப்பெற்ற பரிசு செய்திகளை குறுகிய அளவில் அளவில்தான் தொலைக்காட்சிகளில் காட்டுகிறார்கள். நமக்கென தொலைக்காட்சி இருந்தால் அடிக்கடி அவற்றைக் காட்டி மக்களின் மனதில் இடம்பெற்று, அம்மாவின் அரசு சிறந்த அரசு என்ற பெயர் கிடைக்கும்.
மேலும், அரசுக்கும், மக்களுக்கும் ஊடகங்கள் பாலமாக இருந்து அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றார் முதல்வர் பழனிசாமி.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், அமைப்புச் செயலாளர் பொன்னையன், அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

அதிகரிக்கும் தொண்டை வலி, காய்ச்சல்: பருவகால நோயாக மாறியதா கரோனா?

பாலியல் புகாரில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை: எச்டி குமாரசாமி உறுதி

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

SCROLL FOR NEXT