காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு சரிவர ஒத்துழைப்பு அளிக்காததன் மூலம் காங்கிரசுடனான கூட்டணிக்கு முடிவு கட்ட திமுக விரும்புவதாக தெரிகிறது என, அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மக்களவைத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், தேசிய கட்சியான காங்கிரஸ் நடத்திய இந்தப் போராட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்தப் போராட்டத்தின் வாயிலாக மத்திய அரசு மீது மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தி, நாட்டை ஸ்தம்பிக்க வைப்பது என்றும் இதன் மூலம் மங்கிக் கிடக்கும் காங்கிரஸின் செல்வாக்கை மீட்டெடுப்பது என்பதும் காங்கிரஸின் கணக்கு.
மேலும், இப்போராட்டத்தின் மூலம் எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் முக்கியப் பங்கு வகிக்கும் என இதரக் கட்சியினருக்கு உணர்த்துவது அவசியம் என எண்ணியது காங்கிரஸ். ஆனால், இந்த முழு அடைப்புப் போராட்டம் ஒரு சில மாநிலங்களைத் தவிர இதர மாநிலங்களில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
ஆர்வமில்லாத திமுக...: தமிழகத்தில் காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்த முழு அடைப்புப் போராட்டத்தில் அதன் பிரதான கூட்டணிக் கட்சியான திமுக முழு அளவில் பங்கேற்கவில்லை. சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றிருக்க வேண்டும் என காங்கிரஸின் கட்சியின் தென் சென்னை மாவட்டத் தலைவர் கராத்தே தியாகராஜன் அதிருப்தியை வெளிப்படுத்தினார். தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் கூட இந்தப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை.
திமுக தலைவர் ஸ்டாலின் கூட, இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு திமுகவின் ஆதரவு உண்டு என்று அறிவித்துவிட்டு, ஒதுங்கிக் கொள்ள, பெரும்பாலான இடங்களில் திமுகவின் தொண்டர்கள் மட்டுமே திமுக கொடியோடு சென்று, கைதானார்கள்.
வாகனங்கள் வழக்கம்போல் இயங்க, வணிக நிறுவனங்கள் வழக்கம்போல திறந்திருக்க மக்களின் இயல்பு வாழ்க்கையில் எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை. பெரும்பாலான இடங்களில் இடதுசாரி தொண்டர்களே போராட்டத்தில் ஈடுபட்டு கைதானார்கள். ஆக, காங்கிரஸின் போராட்டம் தமிழகத்தில் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இதன்மூலம் காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியை திமுக இன்னமும் முக்கியத்துவம் இல்லாமல் வைத்திருக்கிறது என அரசியர் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
தமிழகத்தைப் பொருத்தவரை கூட்டணியை தீர்மானிப்பவராக கருணாநிதியைப் போல ஸ்டாலினே முக்கியப் பங்கு வகிக்க வேண்டும் என நினைத்திருக்கலாம். எனவே, காங்கிரஸின் போராட்டத்துக்கு பெரிய அளவிலான முக்கியத்துவத்தை திமுக கொடுக்கவில்லை என்றும் கருத்து தெரிவிக்கின்றனர்.
பாஜகவுடன் கூட்டணியா?: அதேநேரம், செப்.18-ஆம் தேதி மாநில அரசைக் கண்டித்து திமுக போராட்டம் அறிவித்துள்ளது. மத்திய அரசான பாஜகவின் கொள்கைகளைக் கண்டித்திருந்தாலும், மாநில அரசை வீழ்த்த வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக திமுக அறிவித்துள்ளது. ஆக, மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணிக்கான கதவையும் திமுக திறந்தே வைத்துள்ளது என்ற எண்ணத்தையே இது ஏற்படுத்துகிறது என்று கூறும் அரசியல் விமர்சகர்கள், இது காங்கிரசுக்கு தடுமாற்றத்தை ஏற்படுத்துவதோடு, தடம் மாற்றத்தையும் ஏற்படுத்தலாம் என்றும் கூறுகின்றனர்.
காங்கிரஸ் போராட்டம், திமுக போராட்டம் என அரசியல் களம் விறுவிறுப்படையத் தொடங்கியுள்ளது. வருகிற மக்களவைத் தேர்தலில் திமுக பெறப்போகும் மிகப் பெரிய அளவிலான வெற்றியே, ஸ்டாலினை திமுக தலைவராக தொண்டர்கள் அங்கீகரிக்கவும், எதிர்வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் சோர்வின்றி பணி செய்யவும் உதவும்.
அத்துடன், அழகிரி பக்கம் தொண்டர்களின் கவனம் செல்லாமல் இருக்கவும், திமுகவுக்கு வெற்றி என்பது கட்டாயம் தேவை என்பதால் மக்களவைத் தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் வியூகம் அனைத்து தரப்பினராலும் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது. மக்களவைத் தேர்தலை நோக்கி திமுக தலைவராக ஸ்டாலின் எடுத்து வைக்கும் அடிகளும், வியூகங்களும் எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பதை, வர இருக்கும் இடைத் தேர்தல்கள்தான் தீர்மானிக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.