தமிழ்நாடு

குட்கா ஊழல்: மாதவராவ் உட்பட 2 பேருக்கு சிபிஐ காவல் நீட்டிப்பு

DIN

குட்கா ஊழல் வழக்கில் மாதவராவ் மற்றும் சீனிவாசராவ் ஆகியோருக்கு மேலும் 3 நாட்கள் சிபிஐ காவல் நீட்டித்து சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

குட்கா ஊழல் வழக்கில் விசாரணையை தொடங்கிய தில்லி சிபிஐ அதிகாரிகள் வழக்கு சம்பந்தப்பட்ட கிடங்குக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி சீல் வைத்தனர். இதையடுத்து, இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி தே.க.ராஜேந்திரன், சென்னை காவல்துறை முன்னாள் ஆணையர் ஜார்ஜ் ஆகியோரது வீடு உள்பட 35 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் கடந்த 5-ஆம் தேதி சோதனை செய்து முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். மேலும், இந்த வழக்குத் தொடர்பாக சம்பந்தப்பட்ட கிடங்கு உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா உள்ளிட்ட 5 பேரை சிபிஐ அதிகாரிகள் கடந்த 6-ஆம் தேதி கைது செய்தனர். 

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ சார்பில், சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி திருநீலபிரசாத் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது சிபிஐ காவலில் விசாரிக்க மனுதாரர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் வழக்கை விசாரித்த நீதிபதி, மாதவராவ் உள்ளிட்ட 5 பேரையும் வரும் 14-ஆம் தேதி காலை 11 மணி வரை சிபிஐ காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.  

இதனையடுத்து, கைது செய்யப்பட்டவர்களிடம் கடந்த திங்கள்கிழமை முதல் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில், சிபிஐ காவல் இன்றுடன் (வெள்ளிக்கிழமை) நிறைவடைவதையடுத்து மாதவராவ் மற்றும் சீனிவாசராவ் ஆகியோரிடம் விசாரணை முடியாததால் மேலும் 3 நாட்கள் அவகாசம் கேட்டு சிபிஐ அதிகாரிகள் கோரிக்கை வைத்தனர். 

இதையடுத்து, மாதவராவ் மற்றும் சீனிவாசராவ் ஆகியோரது சிபிஐ காவல் மேலும் 3 நாட்களுக்கு நீட்டித்து சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இரண்டு பேரையும் திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜராக்கும்படியும் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

SCROLL FOR NEXT