மியான்மர் தலைநகர் யாங்கூனில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒருங்கிணைந்து நடத்திய பன்னாட்டுத் தமிழ்ப் பேச்சுப் போட்டியில் இந்திய மாணவர் வெற்றி பெற்றார்.
இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறைத் தலைவர் இரா. குறிஞ்சிவேந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மியான்மர் தலைநகர் யாங்கூனில் தமிழ்ப் பல்கலைக்கழகத்திலுள்ள அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறையின் ஒருங்கிணைப்பில், ஆஸ்ட்ரோ வானவில் தொலைக்காட்சியும், வணக்கம் மலேசியா நிறுவனமும் இணைந்து நடத்திய பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான பன்னாட்டுப் பேச்சுப்போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மியான்மரிலுள்ள இளந்தமிழர் இயக்கத்தின் ஒத்துழைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பன்னாட்டுப் போட்டியில் இந்தியா, இலங்கை, மலேசியா, மியான்மர், மோரீஷஸ், ஆஸ்திரேலியா நாடுகளைச் சேர்ந்த 20 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
உலகிலேயே முதன் முறையாக, கல்லூரி மாணவர்களுக்காக 2016ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட அனைத்துலக, பேசு தமிழா பேசு' என்ற தமிழ்ப் பேச்சுப் போட்டியை வழக்கமான முறையில் இருந்து வித்தியாசப்படுத்தி மூன்று சுற்றுகளாக வணக்கம் மலேசியா நிறுவனம் வடிவமைத்திருந்தது.
விறுவிறுப்பான தலைப்புகளில் மோதும் விவாதக் களமாகவும், தலைமைத்துவத் திறனை வெளிப்படுத்தும் விதமாகவும் போட்டிகளின் சுற்றுகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில், நடுவர்களாக மலேசியா, இலங்கை, மியான்மர் நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள் செயல்பட்டனர். சிறப்பு நடுவராக முனைவர் கு. ஞானசம்பந்தன் செயல்பட்டார்.
இறுதிச் சுற்றுக்குத் தேர்வுப்பெற்ற நான்கு கல்லூரி மாணவர்களில், இந்தியாவின் நரேன் கெளதம் நாகராஜன் முதல்நிலை வெற்றியாளராக வாகை சூடினார். இவர் 5,000 மலேசிய ரிங்கிட் ரொக்கப் பரிசையும், சுழற்கிண்ணம், வெற்றிக்கோப்பை மற்றும் சான்றிதழையும் பெற்றார். அடுத்து இரண்டாவது வெற்றியாளராக மலேசிய மாணவர் தேவேந்திரன் சுகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு 3,000 ரிங்கிட் ரொக்கம், வெற்றிக் கோப்பை மற்றும் சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டன.
மூன்றாவது வெற்றியாளர்களாக இருவர் தேர்ந்தெடுக்கப் பட்டனர். இந்தியாவின் முகம்மது துர்வேஸ் மற்றும் ஆஸ்திரேலியாவின் பருணிதன் ரங்கநாதன் ஆகியோருக்கு தலா 2,000 ரிங்கிட் ரொக்கம், வெற்றிக் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
விருதுகள் வழங்கும் விழாவில் ஆஸ்ட்ரோ நிகழ்ச்சிகளின் குழுமத் தலைவர் ராஜாமணி செல்லமுத்து, வணக்கம் மலேசியா நிறுவனர் தியாகராஜன் முத்துசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.