தமிழ்நாடு

வாஷிங்டன் அருங்காட்சியகத்தில் சோழப்பேரரசி செம்பியன் மாதேவி சிலை: 40 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்டது

தினமணி

நாகப்பட்டினம் அருகே உள்ள கோணேரிராசபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு முன் திருடி, கடத்தப்பட்ட சோழர்களின் பேரரசி செம்பியன் மாதேவி சிலை வாஷிங்டனில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் கண்டறிந்தனர்.
 திருவையாறு அருகே உள்ள செம்பியன்குடி குறுநில மன்னர் மழவராயன் மகள் செம்பியன் மாதேவி. சிவன் மீது பக்தி கொண்ட செம்பியன் மாதேவி அங்குள்ள சிவாலயத்துக்குச் செல்லும்போது, தஞ்சை மன்னர் ஸ்ரீ கந்தராதித்யதேவர் பார்த்து, திருமணம் செய்துள்ளார். செம்பியன் மாதேவிக்கு 13 வயதில் திருமணம் நடைபெற்று, 14 வயதில் மதுராந்தகத்தேவர் என்ற மகன் பிறந்துள்ளான்.
 கணவரை இளம்வயதிலேயே இழந்த செம்பியன் மாதேவி, தனது கணவரின் தம்பி அருஞ்சியதேவரை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்துள்ளார். அதன் பின்னர் அவரது மகன் சுந்தர சோழத்தேவரையும், பின்னர் தனது மகன் மதுராந்தகத்தேவர் என்ற உத்தம சோழத்தேவரையும் ஆட்சி செய்ய வைத்துள்ளார். மேலும் தனது பேரன் ஸ்ரீ ராஜராஜதேவர் ஆட்சிக்காலம் வரை உயிருடன் இருந்துள்ளார்.
 செம்பியன் மாதேவி தமிழக கட்டடக் கலையில், பல நுட்பங்களை புகுத்தியுள்ளதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. தமிழகத்தில், கற்களாலான கோயில்கள் கட்டப்பட்டதில் செம்பியன் மாதேவிக்கு முக்கிய பங்கு உண்டு என சோழர் வரலாறு கூறுகிறது.
 விருத்தாசலம், திருக்கோடிக்கா, தென்குரங்காடுதுரை, திருத்துருத்தி, திருமணஞ்சேரி, திருவக்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செம்பியன்மாதேவி சிவாலயங்களைக் கட்டியுள்ளார். இதற்கான வரலாற்றுக் குறிப்புகள், அந்த கோயில்களின் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.
 மகனால் செய்யப்பட்ட ஐம்பொன்சிலை: சோழர்களின் பேரரசியாக வரலாற்றில் அறியப்படும் செம்பியன் மாதேவிக்கு, நாகப்பட்டினம் மாவட்டம் செம்பியன் மாதேவி கிராமத்தில் உள்ள கைலாசநாதர் கோயிலில் ஒரு கற்சிலை உள்ளது. அதே மாவட்டம் கோணேரிராசபுரத்தில் உள்ள கந்தராதித்தேஸ்வரம் என்ற சிவாலயத்தில் ஐம்பொன்னால் செய்யப்பட்ட மூன்றரை அடி உயரம் உள்ள செம்பியன்மாதேவி சிலை இருந்தது. இந்த சிலை செம்பியன் மாதேவியின் மகன் உத்தமசோழத்தேவரால் கோயிலுக்கு வழங்கப்பட்டதாகும்.
 பழைமையான வரலாற்றுப் பின்புலத்துடன் உருவாக்கப்பட்ட இந்த சிலை 40 ஆண்டுகளுக்கு முன்னர், அப்போதைய கோயில் நிர்வாகிகளால் கோயிலில் இருந்து கெட்ட நோக்கத்துடன் அகற்றப்பட்டிருக்கிறது. பின்னர் அந்த சிலை, கடத்தல் கும்பலினால் சர்வதேச சந்தையில் பல கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. இதன் பின்னர், அந்த சிலை என்னவானது என்பது தெரியாமல் இருந்துள்ளது. காலப்போக்கில் அந்தக் கோயிலில் செம்பியன் மாதேவி சிலை இருந்ததற்கான அடையாளங்களும் மறைக்கப்பட்டன.
 சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு: இச் சிலை திருடப்பட்டுக் கடத்தப்பட்டதை சென்னை உயர்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் துப்பு துலக்கி வந்தனர்.இதில் அச் சிலை, அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள பிரியர் அருங்காட்சியகத்தில் இருப்பதை அண்மையில் கண்டறிந்தனர்.
 இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் யானை ராஜேந்திரனும், செம்பியன் மாதேவி சிலை வாஷிங்டன் பிரியர் அருங்காட்சியகத்தில் பார்த்து, அதை புகைப்படம் எடுத்தார். பின்னர் அந்த சிலை புகைப்படத்தை, சம்பந்தப்பட்ட கோயில் பூசாரிகளிடமும்,சிவனடியார்களிடம் காட்டி அது செம்பியன் மாதேவி சிலைதான் என்பதை உறுதி செய்தார்.
 இதையடுத்து அவர், நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி காவல் நிலையத்தில், செம்பியன்மாதேவி சிலை திருடப்பட்டு, கடத்தப்பட்டு வாஷிங்டன் அருங்காட்சியகத்தில் இருப்பது குறித்து புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
 இதற்கிடையே இந்த வழக்கை சிலை திருட்டு மற்றும் கடத்தல் வழக்கை விசாரிக்கும் கும்பகோணம் முதன்மை நடுவர் மன்றம், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் நடத்திட சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின்படி, அந்த சிலை கடத்தலில் ஈடுபட்ட கும்பல் குறித்து ஐ.ஜி. ஏ.ஜி.பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வாஷிங்டன் அருங்காட்சியகத்தில் இருந்து செம்பியன்மாதேவி சிலையை மீட்பதற்குரிய நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
 இச் சம்பவத்தில் 40 ஆண்டுகளுக்கு பின்னர் சிலை திருடப்பட்டது கண்டறியப்பட்டு, வழக்குப் பதியப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

SCROLL FOR NEXT