மாமியார்- மருமகள் சண்டையைப் பார்க்க வசதியாக.. பெண்களுக்கு கார்த்தி சிதம்பரம் காமெடியாக அளித்த வாக்குறுதி
மாமியார் - மருமகள் சண்டையைப் பார்க்க வசதியாக பெண்களுக்கு கேபிள் டிவி கட்டணம் பழைய முறையிலேயே ரூ.100 ஆகக் குறைக்கப்படும் என்று சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் வாக்குறுதி அளித்தார்.
சிவகங்கை: மாமியார் - மருமகள் சண்டையைப் பார்க்க வசதியாக பெண்களுக்கு கேபிள் டிவி கட்டணம் பழைய முறையிலேயே ரூ.100 ஆகக் குறைக்கப்படும் என்று சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் வாக்குறுதி அளித்தார்.
சிவகங்கை அருகே உள்ள சூரக்குளம், மேலமங்களம், சாத்தரசன்கோட்டை, பெரியக் கண்ணனூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்தி ப.சிதம்பரம் தனது ஆதரவாளர்களுடன் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
சிவகங்கையின் பல்வேறு பகுதிகளில் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு வரும் கார்த்தி சிதம்பரம், அலைகடலென திரண்டிருந்த பெண் வாக்காளர்களுக்கு மத்தியில் பேசுகையில் தனது நகைச்சுவை உணர்வைக் கொட்டிப் பேசினார்.
நீங்கள் அனைவரும் மாமியார் - மருமகள் சண்டையை டிவியில் பார்க்க வசதியாக, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் கேபிள் டிவி கட்டணம் குறைக்கப்படும். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கேபிள் கட்டணம் ரூ.100 ஆக இருந்தது. அது தற்போது ரூ.400 ஆக உயர்ந்துள்ளது. அதனை மீண்டும் குறைத்து ரூ.100ஆக மாற்றுவேன் என்று கார்த்தி உறுதி அளித்துள்ளார்.
பிறகு அங்கிருந்த தேனீர் கடையில் சுடச்சுட தேனீர் வாங்கி அருந்திய கார்த்தி சிதம்பரம் பிறகு மீண்டும் தனது பிரசாரத்தை சுடச்சுட ஆரம்பித்தார்.
பிரசாரத்தின் போது கார்த்தி பேசியதாவது, காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருந்த போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், மாணவர்களுக்கான கல்விக் கடன் வழங்குதல் உள்ளிட்ட எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை கொண்டு வந்தது. அதே போன்று, வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் 150 நாள்கள் வேலை வழங்கப்படும். கல்விக் கடன்கள் முழுவதும் ரத்து செய்யப்படும்.
மேலும், தற்போது காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட அனைத்தும் சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கு கிடைக்க பாடுபடுவேன் என்றார்.